அநீதி (தமிழ்)
‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப்படம் `அநீதி’. ஜீ.வி.பிரகாஷ் இசையில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், ஷாரா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் சைக்கோ திரில்லர் திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
உணவு டெலிவரி பாயின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள், காதல் மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலாளித்துவ அநீதிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது இதன் கதைக்களம்.
கொலை (தமிழ்/ தெலுங்கு)
‘விடியும் முன்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி கே. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’. விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை டிடெக்டிவ் அதிகரிகான விஜய் ஆண்டனி விசாரணை செய்கிறார். அந்தக் கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பதே இதன் கதைக்களம்.
Oppenheimer (ஆங்கிலம்/ இந்தி)
`இன்டர்ஸ்டெல்லார்’, `இன்செப்ஷன்’, `தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ போன்ற பிரமிக்க வைக்கும் திரைப்படங்களை எடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்தப்படம் ‘ ‘ஓப்பன்ஹெய்மர்’. இத்திரைப்படம் ஆங்கிலம், இந்தி உள்ளிட மொழிகளில் ஜூலை 21ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் என்பவரின் வாழ்க்கையைக் கதைகளமாக வைத்து எடுக்கப்பட்டது இப்படம். இதில் அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். இதுதவிர ‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
Barbie (ஆங்கிலம்)
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘Little Women’, ‘Lady Bird’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 21ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் பிரபலமான பார்ஃபி டால் பொம்மையை உண்மையாக உலகிற்குக் கொண்டு வந்து மெட்டா உலகத்தைப் போன்ற ஒரு பேன்டஸி உலகமாக உருவாகியுள்ளது ‘Barbie’ திரைப்படம்.
அந்த உலகில் மகிழ்ச்சியாக வாழும் பார்ஃபி என்ற பெண் ஒரு கட்டத்தில் உண்மையான உலகைப் பார்க்கலாம் என்று பார்ஃபி லேண்ட்டிலிருந்து வெளியேறுகிறது. கூடவே கென் என்ற தன் தோழனையும் துணையாக அழைத்துச் செல்கிறது.
உண்மையான உலகில் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மறையாக எல்லாம் நடக்கிறது. புதிதாக பல விஷயங்களையும், அனுபவங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் வாழ்வின் அர்த்தமே மாறுகிறது. கற்பனையான பார்ஃபி லேண்ட்டில் சுதந்திரப் பெண்ணாக வாழ்ந்த பார்ஃபிக்கு உண்மையான உலகில் சுதந்திரம் இல்லை. இறுதியாக பார்ஃபியும், கென்னும் தங்களின் பார்ஃபி லேண்ட்டிற்குத் திரும்பினார்களா? இல்லையா? என்பதுதான் இதன் கதைக்களம். பேன்டஸியான கதைக்களத்தின் மூலம் வாழ்வின் அர்த்தங்களைப் பற்றிப் பேசுகிறது இப்படம்.
சத்திய சோதனை (தமிழ்)
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சத்திய சோதனை’. கிராமத்துக் காவல் நிலையங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கிராமத்தில் வேலையில்லாமல் சுற்றும் பிரேம்ஜி, நகைகளுடன் கொலை செய்யப்பட்டிருக்கும் சடலத்தைக் கண்டு, அது குறித்து காவல் நிலைத்திற்கு தகவல் கொடுக்கிறார். பிரம்ஜிதான் அந்தக் கொலையை செய்தார் என்றும் நகைகளை திருடிவிட்டார் என்றும் சந்தேகிக்கும் காவலர்கள், அவரைக் காவல் நிலைத்தில் வைத்து விசாரிக்கின்றனர். உண்மையில், அந்தக் கொலை எப்படி நடந்தது, அந்த நகைகளை யார் எடுத்தது என்பதே இதன் கதைக்களம்.
Echo (தமிழ்)
நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஆஷிஷ் வித்யார்த்தி, வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘Echo’. ஹாரர் திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதாநாயகனையும் அவரது மனைவியையும் ஏதோவொரு அமானுஷ்ய சத்தம் அச்சத்தையும், மனப்பிறழ்வையும் ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய இருவரும் போராடுகிறார்கள். அந்த அமானுஷ்ய சத்ததிற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பதே இதன் கதைக்களம்.
Raakadhan (தமிழ்)
தினேஷ் கலைசெல்வன் இயக்கி நடித்திருக்கும் தமிழ் திரைப்படம் ‘Raakadhan’. வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், விக்னேஷ் பாஸ்கர், காயத்ரி ரேமா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
மாடல் அழகிகளாக பணிபுரியும் பெண்களை, திட்டமிட்டு இரண்டு மூன்று, ஆண்கள் ஏமாற்றிவிட்டாத இருக்கும் வழக்கை காவல் அதிகாரியாக இருக்கும் கதாநாயகன் விசாரிக்கிறார். பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற மனநிலையில் களமிறங்குகிறார் கதாநாயகன்.
ஆனால், விசாரணையில் அந்த மாடல் அழகிகள்தான் ஆண்களைத் திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள் என்று கதையின் போக்கு மாறுகிறது. மிகுந்த குழப்பத்திற்குச் செல்லும் கதாநாயகன் இறுதியாக இந்தச் சம்பவத்தின் பின்னணியையும், மர்மங்களையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இதன் கதைக்களம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
சிங்க் ‘Sync’ (தமிழ்) – Aha
விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கத்தில் கிஷன் தாஸ், மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா பாலா நந்தகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘Sync’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (இன்று) ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டும் பெண்கள் என நான்கு நண்பர்கள் ஜாலியாக செல்ஃபி எடுத்து விளையாடிக்கொண்டே பயணிக்கின்றனர். தீடீரென ஏற்படும் விபத்து அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. கதாநயகனுக்கு வரும் ஒரு போன் காலுக்குப் பிறகு நண்பர்களில் ஒருவரான மது என்ற பெண் பேயாக மாறுகிறார். அதன்பின் எல்லாம் அமானுஷ்யமான சம்பவங்களாக நடக்கிறது. இதன் பின்னணி என்ன? நான்கு நண்பர்களும் இந்த அமானுஷ்யப் பிரச்னையிலிருந்து தப்பினார்களா? என்பதே இதன் கதைக்களம்.
Bawaal (இந்தி) – Amazon Prime Video
‘தங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் வருண் தவான், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘Bawaal’. காமெடி மற்றும் சைக்கோ திரில்லர் திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (இன்று) ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
வருண் தவான், ஜான்வி கபூர் இருவரும் காதலித்து வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவரின் வாழ்வும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. ஒரு கட்டத்தில் ஹிட்லர் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்ட வருண் தவான், மனைவியை ஜெர்மனிக்கு ஹனிமூன் டூர் அழைத்துச் செல்கிறார்.
அங்கு ஆவணக் காப்பகத்தில் ஹிட்லரில் கொடூரமான வதைமுகாம்கள் பற்றி தெரிந்துகொள்ள நேரிடுகிறது. இது அவருக்கு ஒருவித மனப்பிறழ்வை ஏற்படுத்துகிறது. அவரது ஜாலியான வாழ்க்கைத் தலைகீழாக மாறுகிறது. இதனால் குடும்பத்திலும் பல பிரச்னைகள் உண்டாகிறது. அதன்பிறகு மனப் பிறழ்வு ஏற்பட்ட வருண் தவான் மற்றும் அவரின் மனைவி ஜான்வி கபூர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே இதன் கதைக்களம்.
Trial Period (இந்தி) – Jio Cinema
இயக்குநர் அலேயா சென்னின் ‘Badhaai ho’ எனும் படம் தமிழில் ‘வீட்ல விசேஷம்’ என்று ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் கல்யாண வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் வயதானக் குடும்பப் பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி பேசியப் படம்.
இதையடுத்து மற்றொரு புதியக் களத்தில் பெண்களின் பிரச்னையை ஜாலியாக பேசும் அலேயா சென்னின் அடுத்தப்படம் ‘Trial Period’. இப்படத்தில் ஜெனிலியா, ஷீபா சதா, கஜராஜ் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 21ம் தேதி (இன்று) ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சிங்கள் பேரன்ட்டாகத் தன் குழந்தையை வளர்க்கிறார் ஜெனிலியா. தந்தை இல்லாமல் வளரும் தன் குழந்தைக்கு ஒரு கட்டத்தில் தந்தை வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் வந்துவிடுகிறது. இதற்காக குறுகிய நாட்களுக்கு (Trial Period) மட்டும் சோதனை முறையில் ஒருவரைக் குடும்பத்தில் சேர்த்து அவர் தந்தையாக இருக்கத் தகுதியானவரா என்று சோதித்துத் தேர்ந்தெடுக்க எண்ணுகிறார் ஜெனிலியா.
அதன்படி, ஜெனிலியாவின் கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொண்டு அவரின் குழந்தைக்குக் குறுகிய நாட்களுக்கு சோதனைமுறையில் தந்தையாக இருக்கிறார் மனவ். குழந்தையின் சேட்டைகள், ஜெனிலியாவின் சோதனைகளையெல்லாம் கடந்து மனவ், அக்குழந்தைக்கு நல்ல தந்தையானாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதைக்களம்.
Chandlo (குஜராத்தி) – Jio Cinema
ஹர்திக் கஜ்ஜர் இயக்கத்தில் காஜல் ரோஜா, மானவ் விஜய்சிங் கோஹில், ஷ்ரத்தா தங்கர், ஜெயேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள குஜராத்தித் திரைப்படம் ‘Chandlo’. காதல் திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (இன்று) ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காதல் ஜோடிகள் புரிதலின்மையாலும், குடும்பத்தாலும் பிரிந்து விடுகிறார்கள். குடும்பத்தின் சம்மதத்துடன் இறுதியில் அவர்கள் சேர்ந்தார்களா? என அவர்களது காதல் வாழ்க்கையில் நடக்கும் காதல், பிரிவு, புரிதலின்மை, குடும்ப வாழ்வு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டது இதன் கதைகளம்.
They Cloned Tyrone (English) – Netflix
ஜோயல் டெய்லர் இயக்கத்தில் ஜேமி ஃபாக்ஸ், கீஃபர் சதர்லேண்ட், ஜான் போயேகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘They Cloned Tyrone’. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது ஜூலை 21ம் தேதி (இன்று) ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் சதி சிக்கும் கதாநாயகனின் கும்பல் அதிலிருந்து எப்படி தப்பித்தது? அதன் பின்னணி என்ன? என்பதே இதன் கதைக்களம்.
The (Almost) Legends (Spanish) – Netflix
ரிக்கார்டோ காஸ்ட்ரோ வெலாஸ்குவேஸ் இயக்கத்தில் பென்னி இம்மானுவேல், டாகோபர்ட் ரேஞ்ச், சில்வரியோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பேனிஷ் திரைப்படம் ‘The (Almost) Legends’. இசை நிறைந்த ஜாலியான காமெடி திரைப்படமான இது கடந்த ஜூலை 19ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மியூசிக் பேண்ட் வைத்து ஜாலியாக வாழும் சகோதர்கள் இருவர் தன் அப்பாவை நினைவு கூறவும், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் கார் பயணம் செல்கின்றனர். அப்பயணத்தில் அவர்கள் தங்களின் அப்பாவைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வதுதான் இப்படத்தின் கதைக்களம்.
இந்த வார வெப்சீரிஸ்கள்
Do Gubbare (இந்தி) – Jio Cinema
வருண் நர்வேகர் இயக்கத்தில் மோகன் ஆகாஷே, சித்தார்த் ஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மனதிற்கு இலகுவான இந்தி வெப்சீரிஸ் ‘Do Gubbare’. வயதைக் கடந்து வாழ விரும்பும் முதியவருக்கும் இளைஞருக்குமான நட்புதான் இதன் கதைக்களம். இந்த வெப் சீரிஸ் ஜூலை 20ம் தேதி முதல் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
The Real Housewives of NY City S14 (English) – Netflix
சில்வா, உபா ஹசன், எரின் லிச்சி, சாய் டி சில்வா, ஆண்டி கோஹன், ஜெஸ்ஸல் டாங்க், ஜென்னா லியோன்ஸ் மற்றும் பிரைன் விட்ஃபீல்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘The Real Housewives of NY City S14’. நியூயார்க் சிட்டியில் வாழும் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘The Real Housewives of NY City’ வெப்சீரிஸின் 14-வது சீசன் இது. புதுப் பொலிவுடன், புதிய கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் ஜூலை 17ம் தேதி முதல் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Surf Girls Hawai’i (ஆங்கிலம்) – Amazon Prime Video
ரீஸ் விதர்ஸ்பூன், சாரா ரியா, ஜெட் பியர்சன் IV, ஜெசிகா ராபர்ட்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Surf Girls Hawai’i’. இளம் தலைமுறை நேட்டிவ் ஹவாய் பெண்கள், சர்ஃப் சாகச விளையாட்டைக் கற்று போட்டிகளில் ஈடுபடுகிறார்கள். அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கும் இந்த சர்ஃப் விளையாட்டைக் கொண்டு சேர்க்க முனைக்கிறார்கள் என்பதே இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ஜூலை 18ம் தேதி முதல் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Justified: City Primeval (ஆங்கிலம்) – Disney+ Hotstar
டேவ் ஆன்ட்ரான், மைக்கேல் டின்னர் ஆகியோரது இயக்கத்தில் திமோதி ஒலிபான்ட், பாய்ட் ஹோல்ப்ரூக், அவுன்ஜானு எல்லிஸ்-டெய்லர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Justified: City Primeval’. எல்மோர் லியோனார்ட்ஸ் என்ற எழுத்தாளரின் ‘City Primeval: High Noon in Detroit’ என்ற க்ரைம் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட க்ரைம் திரில்லர் வெப் சீரிஸ் இது. இந்த வெப் சீரிஸ் ஜூலை 19ம் தேதி முதல் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Sweet Magnolias Season 3 (ஆங்கிலம்) – Netflix
நார்மன் பக்லி இயக்கத்தில் ஹீதர் ஹெட்லி, ஜோஅன்னா கார்சியா ஸ்விஷர், ப்ரூக் எலியட், ஜஸ்டின் புரூனிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப் சீரிஸ் ‘Sweet Magnolias Season 3’. மூன்று வெவ்வேறு வயதினைக் கொண்ட பெண்களின் காதல், திருமண வாழ்வு, ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த வெப் சீரிஸ். இது ஜூலை 19ம் தேதி முதல் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Everyone Else Burns (ஆங்கிலம்) – Jio Cinema
தில்லன் மேப்லெடோஃப்ட்; ஆலிவர் டெய்லர் இயக்கத்தில் சைமன், கேட் ஓ’ஃப்ளின், ஆமி ஜேம்ஸ், ஹாரி கானர், அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப் சீரிஸ் ‘Everyone Else Burns’.
மதத்தை உறுதியாகப் பின்பற்றும் குடும்பம் அவர்களைச் சுற்றி நடக்கும் தீமைகளை, சிக்கல்களை எதிர்கொண்டு தீய நெருப்பில் விழாமால் வாழ்கிறார்கள் என்பதே இதன் கதைக்களம். இந்த வெப் சீரிஸ் ஜூலை 20ம் தேதி முதல் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Funny Woman (ஆங்கிலம்) – Jio Cinema
பார்பரா பாண்ட்ஸ் இயக்கத்தில் ஜெம்மா ஆர்டர்டன், டேவிட் த்ரெல்ஃபால், டாம் பேட்மேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Funny Woman’. 1960 களில் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது ஒரு இளம் பெண் நகைச்சுவை நடிகராக உருவெடுத்து புரட்சி செய்துதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ஜூலை 20ம் தேதி முதல் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தியேட்டர் டு ஓடிடி
அஸ்வின்ஸ் (தமிழ்) – Netflix
வெளிநாடு சென்று பேயைப் படம் பிடிக்க முயலும் யூடியூபர்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இதன் கதைக்களம். தருண் தேஜா மல்லாரெட்டி இயக்கத்தில் வசந்த் ரவி, முரளிதரன், விமலா ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். ஹாரர், திரில்லரான இப்படம் ஜூலை 20ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Maurh (பஞ்சாபி) – Zee5
ஜதீந்தர் மௌஹர் இயக்கத்தில் அம்மி விர்க், தேவ் கராட், விக்ரம்ஜீத் விர்க் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பஞ்சாபி திரைப்படம் ‘Maurh’. 1885 மற்றும் 1893 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளுக்கு எதிராகப் போராடிய பஞ்சாபின் சாதாரண கிராமத்து மனிதரான ஜியோனா மவுரின் நிஜ வாழ்க்கைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்படம் ஜூலை 20ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.