கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரின் பாதுகாவலர் உட்பட மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக காவல்துறையின் டிஐஜியாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவர், கடந்த 7-ம் தேதி, கோவையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக, கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கிடையே, டிஐஜி விஜயகுமார் உயிரிழப்பு தொடர்பாக யூ-டியூப் , முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின. சிலர், அவரது உயிரிழப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையிலும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய, அவதூறாக பேசிய நபர்களுக்கு ராமநாதபுரம் காவல் நிலையத்தினர் சம்மன் அனுப்பினர்.
அதன்படி, யூ-டியூபர்கள், அதில் பேசியவர்கள் என கடந்த 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதிகளில் தலா இருவர் என மொத்தம் 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக உயிரிழந்த டிஐஜி விஜயகுமாரின் பாதுகாவலர் ரவிச்சந்திரன், ஓட்டுநர் அன்பழகன், முகாம் அலுவலக காவலர் ரவிவர்மா ஆகியோரிடம் இன்று (ஜூலை 21) விசாரணை நடத்தப்பட்டது. போத்தனூர் சரக உதவி ஆணையர் கரிகால் பாரிசங்கர் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். சில மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.