விழுப்புரம்: மரத்திலிருந்து காய்ந்து விழுந்த இலைகள்; உருவான பங்காளி சண்டை… கொலையில் முடிந்த சோகம்!

விழுப்புரம் அருகேயுள்ள பா.வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு சிவசங்கரி என்ற பெண்ணுடன் 13 வருடங்களுக்கு முன்பாக திருமணமாகியிருக்கிறது. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். ஹரிகிருஷ்ணனின் வீடும், அவரின் பெரியப்பா மகன் ஆனந்தராஜ் என்பவரின் வீடும் பக்கத்து பக்கத்திலேயே அமைந்திருக்கின்றன. ஆனந்தராஜ் இடத்தில் அமைந்திருக்கும் பூவரச மரத்திலிருந்து காய்ந்த இலைச்சருகுகள் கீழே விழுந்து, ஹரிகிருஷ்ணன் வீட்டுப் பகுதியில் குப்பைகளை ஏற்படுத்துவதாலும், சாக்கடை தண்ணீர் செல்வது தொடர்பாகவும் இரு வீட்டாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது.

கத்திக் குத்து

இந்த நிலையில், வழக்கம்போல ஆனந்தராஜ் இடத்திலுள்ள பூவரச மரத்திலிருந்து விழுந்த இலைச்சருகுகள், ஹரிகிருஷ்ணன் வீட்டுப் பகுதியில் குப்பையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ஹரிகிருஷ்ணனின் மனைவி, ஆனந்தராஜிடம் கேட்டாராம். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கட்டட வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டுக்குத் திரும்பிய ஹரிகிருஷ்ணனிடம், நடந்தவற்றை அவரின் மனைவி தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு இரு குடும்பத்தாருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ஆனந்தராஜும் அவருடைய மூன்று மகன்களும் இணைந்து ஹரிகிருஷ்ணனை தாக்கினார்களாம். அந்த சமயம், காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை எடுத்து வந்த ஆனந்தராஜ்… ஹரிகிருஷ்ணனின் இடது தொடை மற்றும் கணுக்கால் பகுதியில் குத்தியிருக்கிறார். இதனால் மிகுந்த ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ஹரிகிருஷ்ணன் மயங்கியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆனந்தராஜ்

உடனே அவரை மீட்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணி அளவில் ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆனந்தராஜ், அவர் மனைவி விஜியா மற்றும் 3 மகன்கள்மீது 147, 148, 294(b), 324, 306(2), 302 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ள வளவனூர் போலீஸார்… ஆனந்தராஜ் மற்றும் அவரது 3 மகன்களைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து, குப்பைகளை ஏற்படுவது தொடர்பாக பங்காளிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு உயிர் பறிபோகியிருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.