ஜெய்ப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக, மணிப்பூர் வன்முறை விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசிய அம்மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
மணிப்பூரில் இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரமான வீடியோவை பார்த்து வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி,மிகுந்த வேதனையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் நிற்கிறேன்.
மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மணிப்பூரில் நடந்த இந்த சம்பவம் நாகரிகமான எந்த சமுதாயத்துக்கும் அவமானம். இது ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்பட செய்துள்ளது. நாட்டு மக்கள் 140 கோடி பேரும் வெட்கி தலைகுனிந்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்தி பெண்களை பாதுகாக்க வேண்டும். மக்கள் சட்டம் – ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களை மதிக்க வேண்டும் ” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானை குறிப்பிட்டு பேசிய அடுத்த இரண்டு நாளில் அம்மாநில அமைச்சர் ஒருவரே , தங்கள் அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டதாக கூறியுள்ளார்.
&ராஜஸ்தான் குறைந்தபட்ச வருமான உத்தரவாத மசோதா 2023′ மீதான விவாதத்தின் போது, வெள்ளிக்கிழமை சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா பேசும் போது, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டோம் என்பது உண்மை தான். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை பார்க்கும் போது, மணிப்பூர் பிரச்சினையை எழுப்புவதற்கு பதிலாக , இந்த விஷயத்தில் நாம் சரியாக இருக்கிறோமா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த பேச்சை கேட்டு ஆடிப்போன ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,இன்று மாலையே அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தார். அதை ஏற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ராஜேந்திர சிங் குதா ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனிடையே பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் இது பற்றி கூறும் போது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(2)ன்படி, கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் மாநில அரசு செயல்படுகிறது. எனவே ஒரு அமைச்சர் பேசினால், முழு அரசும் பேசுகிறது என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அந்த வகையில் அமைச்சர் குதா இந்த காங்கிரஸ் அரசை அம்பலப்படுத்தியுள்ளார். நான் அவரை வாழ்த்துகிறேன், ஆனால் இது வெட்கக்கேடான விஷயம்.” என்று ஆவேசமாக கூறினார்.