புதுடெல்லி: நாட்டில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சேகரித்துள்ளது. இதுகுறித்து ஏடிஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக கர்நாடக மாநில கனகபுரா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ டி.கே.சிவகுமார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி. கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் 2 எம்எல்ஏக்கள் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர். கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ கே.எச்.புட்டசாமி கவுடாவுக்கு ரூ.1,267 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மற்றொரு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியா கிருஷ்ணாவுக்கு ரூ.1,156 கோடி சொத்துகள் உள்ளன.
இதுகுறித்து டி.கே.சிவகுமார் கூறும்போது, “நான் மிகவும் பணக்காரன் என்று கூற மாட்டேன். என்னுடைய சொத்துகள் எல்லாம் நீண்ட காலத்துக்கு முன்பு வாங்கியவை. நான் பணக்காரனும் அல்ல. அதே நேரத்தில் ஏழையும் அல்ல” என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷாத் கூறும்போது, “துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பல்வேறு தொழில்களை நடத்துகிறார். இதில் தவறு என்ன இருக்கிறது? பாஜக எம்எல்ஏக்களாக உள்ள சிலரிடமும் அதிக சொத்துகள் உள்ளன. சுரங்க ஊழலில் சிக்கியுள்ள பாஜக எம்எல்ஏக்களின் சொத்துகளைக் கணக்கிடுங்கள்” என்றார்.
கர்நாடக பாஜக மூத்த தலைவர் சுரேஷ் குமார் கூறும்போது, “சுரங்க ஊழலில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் பணக்கார நபர்களை காங்கிரஸ் விரும்புகிறது” என்றார்.
நாட்டில் உள்ள பணக்கார எம்எல்ஏக்களில் 23-வது இடத்தில் உள்ளவர், பெல்லாரியைச் சேர்ந்த கலி ஜனார்த்தன ரெட்டி. பாஜகவில் இருந்த அவர் கடந்த ஆண்டு கட்சியிலிருந்து விலகி கல்யாண ராஜ்ஜிய பிரகதி பக்ஷா என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டார்.
மிகவும் ஏழையான எம்எல்ஏக்களும் பாஜகவில் உள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நிர்மல் குமார் தாராவுக்கு சொத்தாக ரூ.1,700 ரொக்கம் மட்டுமே உள்ளது. அவருக்குச் சொந்தமாக வீடு கூட இல்லை. அவருக்கு அடுத்தபடியாக ஒடிசா சுயேச்சை எம்எல்ஏ மகரந்த முதுலிக்கு சொந்தமாக ரூ.15,000 மட்டுமே உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவிடம் ரொக்கம் ரூ.18,370 மட்டுமே உள்ளது.
நாட்டில் உள்ள பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.