இம்பால்: நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு விருது பெற்ற காவல் நிலையம் அருகிலேயே மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த துயரம் நடைபெற்றுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தேசத்தையும் இந்த வீடியோ அதிரவைத்தது.
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய பிறகு மறுநாள் அதாவது மே 4ம் தேதி காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் 800 முதல் 1000 பேர் அடங்கிய கும்பல் ஒரே குடும்பத்தை சேர்ந்த குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 5 பேரை சித்ரவதை செய்து தாக்கியுள்ளது. இதில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் 3 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்.
இதில் 2 பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லும் வீடியோ தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. நாடாளுமன்றம் கடந்த இரு தினங்களாக மணிப்பூர் விவகாரத்தால் முடங்கியது. இதற்கிடையே மணிப்பூரில் நடந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தவறை செய்தவர்கள் தப்பிக்க முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார். ஒட்டு மொத்த தேசமும் மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த அவலத்தால் கொதித்து போய் உள்ளது. காவல்துறையினர் அங்கு என்ன செய்து கொண்டு இருந்தனர் என்ற கேள்வியும் கடுமையாக எழுப்பப்பட்டது. வீடியோ வெளியாகி கடும் நெருக்கடியை கொடுத்த பிறகு ஆக்ஷனில் இறங்கிய போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, தேசத்தையே தலைகுனிய வைக்கும் வகையில் நடந்த இந்த படுபாதாக செயல் நடந்த இடத்தில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் இருந்ததாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தனைக்கும் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற விருதை பெற்றதும் அந்த காவல் நிலையம் என்பதுதான் வேதனையிலும் வேதனை. நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற விருதை வாங்கிய போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே பெண்களுக்கு இத்தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை சிறப்பாக ஒடுக்குதல், ஒடுக்கப்பட்டோருக்கான எதிரான கொடுமைளை தடுப்பது உள்ளிட்டவற்றை சிறப்பான கையாளுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் உள்துறை அமைச்சகத்தால் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், மணிப்பூரில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலையம் 2020 ஆம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை உள்துறை அமைச்சகம் வழங்கியிருக்கிறது.