கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்குள் காரில் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் உள்ள ஹரீஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது. நேற்று காலையில் முதல்வர் மம்தா வீட்டில் இருக்கும்போது, போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் வந்த ஒருவர் இத்தெருவுக்குள் நுழைய முயன்றார். அவரது காரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, முதல்வர் மம்தாவை சந்திக்க விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார்.
அவரது காரை போலீஸார் சோதனையிட்டதில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பிஎஸ்எப் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த போலீஸார் அந்த நபரை பிடித்து, காளிகாட் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் கூறும்போது, “அந்த நபரிடம் இருந்து பல்வேறு போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அறிய முயன்று வருகிறோம். அந்த நபர் முதலில், தான் அனந்தபூரை சேர்ந்தவர் என்றார். பிறகு பாஸ்சிம் மெதினிபூர் என்கிறார். இதில் உண்மை என்ன என்பதை நாங்கள் சரிபார்த்து வருகிறோம்” என்றார்.
மற்றொரு அதிகாரி கூறும்போது, “அந்த நபர் தற்போது போலீஸார் காவலில் இருக்கிறார். காளிகாட் காவல் நிலையத்தில் காவல்துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
முதல்வர் மம்தா நேற்று மத்திய கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் தின கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்துக்கு அவர் புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனால் பரபரப்பு உருவானது. முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து பாஜகவை சேர்ந்த, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்தில் காளிகாட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மாநகர காவல் ஆணையரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.