இம்பால்: குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ கடந்த 80 நாட்களாக மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு யார் காரணம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தின் தன்மை: வடகிழக்கு இந்தியாவின் மிகவும் எழில்மிக்க மாநிலம்தான் மணிப்பூர். இங்கு பெரும்பான்மையாக அதாவது 54 சதவிகிதம் அளவுக்கு மெய்டெய் மக்கள் வாழ்கின்றனர். அதேபோல 40-43 சதவிகிதம் வரை குக்கி, ஜோ, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலைகளிலும், மலை சரிவுகளிலும் வாழ்கின்றனர். அதேபோல மெய்டெய் மக்கள் இம்பால் உள்ளிட்ட பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்.
இம்மாநிலத்தில் குக்கி உள்ளிட்ட பழங்குடி சமூக மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இருக்கிறது. அதேபோல இங்குள்ள மலைப்பிரதேசங்களில் இடங்களை வாங்குவதற்கு மெய்டெய் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்நிலையில், தங்களையும் பழங்குடி சமூகத்தின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மெய்டெய் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சமீபத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்த கோரிக்கை பலமாக எழுப்பப்பட்டது.
இந்நிலையில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, மெய்டெய் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் கூட கொடுத்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. எனவே அம்மக்கள் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது பற்றி விரைந்து முடி வெடுக்குமாறு கடந்த ஏப்ரல் 19 அன்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுதான் தற்போதைய வன்முறைக்கான தொடக்க புள்ளியாக பார்க்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்களுடைய தனித்துவம் காணாமல் போய்விடும் என்று குக்கி மக்கள் போராட்டங்களையும், பேரணிகளையும் தொடங்கினர். இதற்கு எதிராக மெய்டெய் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு கட்டத்தில் பெரும் வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபொல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மூன்று முறை அம்மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் மணிப்பூர் அரசிடமிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல இந்த சம்பவம் குறித்து மே மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 70 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.