"கவர்னர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்ற மாயை உள்ளது".. சடாரென ஒப்புக்கொண்ட ஆளுநர் ரவி

சென்னை:
ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனக்கான பணிகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கூறியது தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. “ஆளுநர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. எனக்கு அதிக வேலையே இல்லை” என்று அவர் கூறியுள்ளார். ஆளுநர் என்ற பதவிகளையே நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஆர்.என். ரவி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, திமுக அரசுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.

திமுகவை கொள்கை ரீதியாக விமர்சிப்பது; அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் இருப்பது; முக்கிய கோப்புகளை கிடப்பில் போடுவது என ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதால், அவரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதும் வரை இந்த மோதல் சென்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பதையே மத்திய அரசு ஒரு வேலையாக வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், பெரிய அளவில் எந்த வேலையும் இல்லாமல் அதிக சம்பளத்தையும், பல சலுகைகளையும் பெற்று வரும் ஆளுநர் பதவிகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனவும் பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமான ஒரு கருத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார். இன்று ராஜ்பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவியிடம் இளைஞர் ஒருவர், “ஆளுநருக்கான பொறுப்புகளும், பணிகளும் நிறைய இருக்குமே.. அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?” என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, “ஆளுநர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என மக்கள் முன்பு ஒரு மாயை உள்ளது. என்னை பார்க்கும் பலரும், உங்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்குமே என கேட்பார்கள். ஆனால் உண்மையில் எனக்கு அதிக வேலைகளே இல்லை” எனக் கூறினார். இதனிடையே, ஆளுநரின் இந்த பதிலை வைத்து அவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.