போபால்:
மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை சாலைகளில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு செருப்படி தண்டனை வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் கால்நடைகள் சகட்டுமேனிக்கு திரிவது இந்தியாவின் தேசிய பிரச்சினையாகவே மாறிவிட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுவான ஒரு பிரச்சினையாக இது இருக்கிறது. சாலைகளில் இவ்வாறு கால்நடைகள் சுற்றித்திரிவதால் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான விபத்துகள் நேரிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப்புது விதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதங்கள் விதிப்பது, சிறைத்தண்டனை விதிப்பது என பலவிதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆனால், லஞ்சம், உள்ளூர் அரசியல் செல்வாக்கு போன்ற பல காரணங்களால் இந்த உத்தரவுகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடிவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களால் இத்தனை பிரச்சினைகள் ஏற்படுகிறதே என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் கால்நடைகளின் உரிமையாளர்கள் இருப்பதுதான் இந்த அவலம் தொடர்வதற்கு காரணமாக உள்ளது.
400 ஆண்டுகள் பழமையான மசூதிகள்.. உடனே அகற்றுமாறு ரயில்வே அதிரடி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்!
இந்நிலையில், இப்படிப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு உரைக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷஹதோஸ் மாவட்டத்தில் உள்ள நாகநாடுயி கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தில் இன்று இதுதொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், “கால்நடைகள் சாலைகளில் திரிந்தால் அவை பிடித்து வைக்கப்படும். பின்னர் அந்த கால்நடைகளை விடுவிக்க் கோரி வரும் உரிமையாளர்களுக்கு கன்னத்தில் 5 செருப்படியும், ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இதை தண்டோரோ போட்டும் ஊர் முழுக்க அறிவிக்கப்பட்டது.