தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகு நடந்த அமைச்சரவைக் கூட்டம் என்பதால், முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இன்று காலை 10:30 மணிக்குத் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம், கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் நீடித்தது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாகப் பெரியளவில் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
உயர்த்தப்படும் உதவித்தொகைகள்!
மேலும் முதியோர், ஆதரவற்றோர், கைம்பெண் உதவித்தொகை ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
உரிமைத்தொகை முகாம் தொடக்கம்!
மகளிர் சுய உதவிக் குழுக்களை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தருமபுரியில் தொடங்கினார். அதுபோல், பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியத் திட்டமாக இருக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முகாமை தருமபுரியில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அதை முறையாகக் கண்காணிக்க அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவது என்றும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டிருக்கிறது.
முதலீடு ஈர்க்கத் திட்டம்!
தமிழகப் பொருளாதாரத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனடிப்படையில், சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்களின் தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழகத்தின் முதலமைச்சர், தொழில்துறை அமைச்சர் பயணம் மேற்கொண்டனர். இதில் முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்தானதாகச் சொல்லப்பட்டது. அப்போது, ஏற்கெனவே தமிழகத்தில் முதலீடு செய்திருக்கும் சில நிறுவனங்கள் அதை விரிவுபடுத்த வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைத்திருக்கின்றன. அது தொடர்பாகவும், மேலும் முதலீட்டு மாநாட்டுக்கு அழைக்க வேண்டிய நிறுவனங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தி.மு.க அமைச்சர்கள்மீது அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட அமலாக்கத்துறை ரெய்டு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது!