மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘உதிரம் 2023’ என்ற தலைப்பில் குருதிக் கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டி அரசு மருத்துவ கல்லூரியில் தொடங்கி 10 கி.மீ. தூரம் நடந்தது. இதில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(20) பங்கேற்றார்.
போட்டி முடிந்த பிறகு மேடைக்கு அருகேயுள்ள கழிப்பறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். சக மாணவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் வெளியிட்ட அறிக்கை: மாணவர் தினேஷ் போட்டி முடிவடைந்ததும் நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார். கழிப்பறைக்கு சென்ற நிலையில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவக் குழுவினர் அவசர சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காலை 10.05 மணி வரை இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் மிகவும் குறைவாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு சுயநினைவு போய்விட்டது. அதன்பின் திரும்பவில்லை.
இந்தச் சூழலில் காலை 10.10 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மீண்டும் அவருக்கு அனைத்து அவசர சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 10.45 மணிக்கு இறந்து விட்டார் என கூறியுள்ளார்.