சென்னை: Vijay (விஜய்) விஜய் கட்சி தொடங்கினால் அதில் இணைவீர்களா என்ற கேள்விக்கு விஷால் பதிலளித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கிடையே லியோ படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.
விஜய் மக்கள் இயக்கம்: விஜய் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ அதே அளவு தனது மக்கள் இயக்க செயல்பாடுகளிலும் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் மாணவ, மாணவிகளை சந்தித்தது, அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர பாடசாலையை திறந்து, ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் செய்வது என விஜய் மக்கள் இயக்கத்தினர் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அரசியல் எண்ட்ரி?: ரொம்ப வருடங்களாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் சமீப காலமாகத்தான் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான விதை விதைக்கும் பணியில்தான் இப்போது ஈடுபட்டிருக்கிறார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை தொடங்கி நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர். அதை உணர்த்தும் விதமாக போஸ்டர்களையும் அடிக்கின்றனர்.
விஷாலிடம் கேள்வி: இந்நிலையில் சமீபத்தில். கல்லூரி விழா ஒன்றில் விஷால் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், விஜய் கட்சி தொடங்கினால் நீங்கள் அதில் இணைவீர்களா என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், “அது கடவுளின் கையில்தான் இருக்கிறது. கடவுளின் முடிவு எதுவாக இருந்தாலும் அதன்படி நான் செயல்படுவேன். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
எல்லோரும் அரசியல்வாதிதான்: இங்கே ஏற்கனவே எல்லோருமே அரசியல்வாதிகள்தான். உங்களை அறியாமலேயே நீங்கள் உதவி செய்திருப்பீர்கள். நீங்கள் 50 ரூபாய் கொடுத்து உதவினாலும் நீங்கள் அரசியல்வாதிகள்தான். அரசியல் என்பது சமூக சேவை. அது வியாபாரம் அல்ல” என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் விஷாலும் அரசியல் ஈடுபாடு உள்ளவர் என்பதால் விஜய் கட்சி தொடங்கினால் அவர் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே ரசிகர்களிடம் எழுந்திருந்தது.
விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்கூட மார்க் ஆண்டனி டீசரை நடிகர் விஜய்யிடம் காண்பித்து விஷால் உள்ளிட்டோர் வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது. மார்க் ஆண்டனிக்கு அடுத்ததாக இயக்குநர் ஹரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க விஷால் ஒப்பந்தமாகியிருக்கிறார்.