இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தனது மகள் நலமாக இருக்கிறாரா என அறிந்து கொள்ள போன் செய்த தாய்க்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. அதில் இருந்து அவரால் இன்னுமே மீண்டு வர முடியவில்லை.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இனமோதல் நடந்து வருகிறது. இதில் அங்குப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்த தகவல்கள் உறைய வைப்பதாக இருக்கிறது.
அப்படி அங்கே நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது மணிப்பூரில் உள்ள ஒரு பழங்குடிப் பெண் தன் மகளின் இருப்பிடத்தைக் கண்டறிய ஃபோன் செய்துள்ளார். அப்போது அவருக்குக் கிடைத்த தகவல்கள் தான் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தாய் கண்ணீர்: அதாவது மறுமுனையில் போனை எடுத்துப் பேசிய ஒரு நபர், “உனது மகள் உனக்கு உயிருடன் வேண்டுமா.. இல்லை பிணமாக வேண்டுமா எனக் கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த தாயின் கண்டிரோலை தாண்டி கண்ணீர் கொட்டியுள்ளது. அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவரது மகள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. இம்பாலில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர்களில் இவரது மகளின் ரத்தம் இன்னுமே இருக்கிறது.
இன்னும் மகளின் உடலை கூட தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார்.. இது குறித்த அந்த தாய் மேலும் கூறுகையில், “என்னால் இன்னும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இப்போதும் கூட சில சமயம் எனது மகள் திரும்ப வருவார் என்று நான் பார்ப்பேன்.. ஏனென்றால் இன்னும் உடலைக் கூட அவர்கள் தரவில்லை. அவரது அப்பா இப்போதும் மருத்துவமனைக்குச் சென்று மணிக்கணக்கில் காத்திருப்பார். அவராலும் எதையும் நம்பவே முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
பலாத்காரம் செய்து கொலை: மணிப்பூரில் இன வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த மே 5ஆம் தேதி மாலை கார் வாஷிங் கடையில் வைத்து கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்களில் ஒருவரது குடும்பத்தினர் தான் இவர்கள்.
அன்றைய தினம் கார் வாஷிங் கடையைச் சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த இந்த இரு பெண்களையும் ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.. இருவரும் கத்தி, விட்டுவிடும்படி கெஞ்சிய போதிலும் அந்த கும்பல் அதற்குச் செவி கொடுக்கவில்லை. அந்த வன்முறை கும்பலில் இருந்த பெண்களே.. இவர்களைப் பலாத்காரம் செய்யச் சொன்னது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இவர்களின் உடல் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழக (JNIMS) மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயிருடன் வேண்டுமா: இது குறித்து இந்த பெண்ணின் தாயார் மேலும் கூறுகையில், “அப்போது மாநிலம் முழுக்க கலவரம் ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதனால் எனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நான் அவருக்குக் கால் செய்தேன்.. அப்போது மறுமுனையில், வேறு ஒரு பெண் தான் எடுத்தார். ‘உன் மகள் உனக்கு உயிருடன் வேண்டுமா இல்லை பிணமாக வேண்டுமா என அவர் கேட்டார். அதன் பிறகு அவர் சொன்ன எதுவும் எனக்குக் கேட்கவில்லை.
நான் ஒரு இதய நோயாளி.. இதனால் எனது குடும்பத்தினர் என்னிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள். எனவே தான் நானே எனது மகளிடம் கேட்கலாம் என போன் செய்தேன்.. அப்போது தான அ இந்த கொடூரம் எல்லாம் நடந்தது” என்று அவர் தெரிவித்தார்.
![Shocking incident Want Your Daughter Dead Or Alive? Another Manipur incident Shocking incident Want Your Daughter Dead Or Alive? Another Manipur incident](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot14074-1690172570.jpg)
எப்போது நடந்தது: மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துவரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதே நாளில் (மே 5) தான் இந்த கொடூரமும் நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 90கிமீ தொலைவில் தான் இது அரங்கேறியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எந்த ஒரு நபரையும் கைது செய்யவில்லை..
இனக் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய குற்றங்கள் குறித்த தகவல்கள் தான் இப்போது பகீர் கிளப்பி வருகிறது. கடந்த மே மாதம் முதல் நடக்கும் இனக் கலவரத்தில் மட்டும் அங்கே 125 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.