ஜெருசலேம்: நீதித்துறையின் அதிகாரங்களை காலி செய்யும் வகையில் நெதன்யாகு கொண்டு வந்த சட்டம், கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு இஸ்ரேல்.. இங்கே மிகவும் பவர்புல்லான அரசியல் தலைவராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு.. இவர் கடந்த 2009 முதல் பிரதமராக இருந்து வருகிறார்.
இடைப்பட்ட காலங்களில் அவரது கட்சி உட்பட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பிரதமர் பதவி தனக்கு வரும்படி பார்த்துக் கொண்டார். இதனால் சுமார் 12 ஆண்டுகள் அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்தார்.
நெதன்யாகு: இதற்கிடையே கடந்த 2021இல் அங்கு அவரை தவிர்த்த ஒரு கூட்டணி உருவானது.. இதனால் அந்த சில மாதங்கள் மட்டும் அவர் பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. இருப்பினும், 2022இல் கூட்டணி அரசு கவிழவே, பக்காவாக காய் நகர்த்தி அப்போது பிரதமர் பதவிக்கு தனக்கு வருவது போல இவர் பார்த்துக் கொண்டார். அந்தளவுக்கு அதிகாரம் எப்போதும் தன்னிடம் இருப்பதையே நெதன்யாகு விரும்புவார்.
அங்கே சமீப காலங்களாக நெதன்யாகுவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மற்ற அரசியல் கட்சிகள் இல்லை.. மாறாக அங்கே இருக்கும் நீதிமன்றம்.. நெதன்யாகு மீது பல ஊழல் வழக்குகள் நடந்து வந்தன. இதை அந்நாட்டு நீதித்துறை தீவிரமாகக் கையில் எடுத்த நிலையில், நெதன்யாகு பிரதமர் பதவியை இழக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நெதன்யாகு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முடிவெடுத்தார்.
சட்டம்: இதற்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டம் நடைபெற்ற போதிலும், அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தான் விரும்பியபடி நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வந்தார். இதற்கிடையே இஸ்ரேலிய எம்பிக்கள் இந்தச் சட்டங்களுக்கு நேற்று திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளனர். இந்தச் சட்டம் நிறைவேறும் போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாட்டிற்கே அவமானம் என்று கோஷமிட்டபடி, நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.
இதன்படி அரசு எடுக்கும் முடிவுகளை “நியாயமற்றது” என்று கூறி இனிமேல் அந்நாட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இயற்றும் சட்டங்களை மக்களைச் சந்திக்காத ஒருவர் நியாயமற்றது என்று சொல்வது சரியானது இல்லை என்பது நெதன்யாகு தரப்பினரின் வாதம். இருப்பினும், இஸ்ரேல் நாட்டில் இப்போது ஊழல் தலைவிரித்தாடும் நிலையில், இந்தச் சட்டம் நீதிமன்றத்தின் கண்காணிப்பை நீக்குவதாக எதிர்க்கட்சி எம்பிகள் விமர்சித்தனர்.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய நிலையில் 64-0 என்று இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டித்து ஏற்கனவே இஸ்ரேல் நாட்டில் போராட்டங்கள் அதிகரித்துவிட்டது. வரும் நாட்களில் போராட்டம் மேலும் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பிடம் இருந்து நெதன்யாகுவிற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
பறந்த கடிதம்: நெத்தன்யாகு மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தும் வகையில், அங்குள்ள பல ஆயிரம் ராணுவ வீரர்கள் அந்நாட்டு அரசுக்கு முக்கிய கடிதத்தை எழுதியுள்ளனர். அதாவது நெதன்யாகு நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு அழைத்துச் செல்வதால் அரசின் கீழ் பணியாற்றப் போவதில்லை என அறிவித்துள்ளனர். நிலைமை இப்படியே மோசமாகச் சென்றால் அங்கு ராணுவ ஆட்சி கூட வந்துவிடுமோ என அஞ்சப்படுகிறது.