கும்பகோணம்: மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தி கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் மைதேயி – குகி பழங்குடி சமூகத்தினருக்கு இடையே நடக்கும் மோதலில் மைதேயி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக சிலர் இழுத்துச் சென்று வன்கொடுமை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 19-ம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் மணிப்பூரில் அமைதி ஏற்பட ஆங்காங்கே போராடி வருகின்றனர்.
அந்த வகையில், கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாசலில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தி தரையில் அமர்ந்து கண்டன முழக்கமிட்டனர். தமிழ்த் துறை மாணவரும், இந்திய மாணவர் சங்க நிர்வாகியுமான பிரதீப் தலைமை வகித்தார்.
மணிப்பூரில் அமைதி ஏற்படுத்தவும், பெண்களை பாலியல் துன்புறத்தலுக்குள்ளாக்கிய குண்டர்களை கைது செய்து மத்திய அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாசல் முன் தரையில் அமர்ந்து, ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.