அகமதாபாத்: பாஜக எம்.எல்.ஏக்கள் உள்பட 100 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில், திடீரென விமானி அந்த விமானத்தை இயக்க மறுத்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
பேருந்துகள் உரிய பராமரிப்பு இன்றி இருப்பதாகவும் அதிக நேரம் வேலை கொடுத்து துன்புறுத்துவதாகவும் கூறி பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க மறுத்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதை கேள்வி பட்டு இருக்கிறோம். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஆனால், சமீப காலங்களாக விமானங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதை காண முடிகிறது.
அப்படியான ஒரு சம்பவம்தான் குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ஏர் இந்தியா விமானத்தை விமானி திடீரென இயக்க மறுத்ததால் அதில் இருந்த பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட இருந்தது.
விமானம் இரவு 8.30 மணியளவில் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் குஜராத்தில் ஆளும் பாஜகவின் எம்.எல்.ஏக்கள் பயணம் செய்ய இருந்தனர். மொத்தம் 100 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில் விமானத்தை இயக்க திடீரென விமானி மறுத்து விட்டார். விமான போக்குவரத்து ஒழுங்கு முறை விதிகளின் படி தனது பணி நேரத்தை தாண்டி வேலை பார்த்து விட்டதாகவும் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது என்றும் விமானி கூறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும், இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா, ஆபரேஷனல் காரணங்களால் விமானம் தாமதம் ஆனதாக தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக விமான பணி நேர வரம்பை (FDTL) விமானி கடந்து விட்டதால், விதிகளின் படி அவர் விமானத்தை இயக்கவில்லை. இன்று FDTL விதிகளில் எந்த சூழலிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளது.
விமானம் இயக்கப்படுவதில் தாமதம் ஆனதால், டெல்லிக்கு அவசரமாக புறப்பட இருந்த பயணிகள் அகமதாபாத்திற்கு சாலை வழியாக அழைத்து சென்று அங்கிருந்து மாற்று விமானங்களில் செல்ல ஏர் இந்தியா ஏற்பாடு செய்தது. பிற பயணிகளுக்கு அவர்கள் விரும்பியதால் டிக்கெட் கேன்சல் செய்து கொடுக்கப்பட்டது. டெல்லி செல்ல நினைத்த பயணிகள் புக்கிங் தேதி மாற்றப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த மாத துவக்கத்திலும் ஏர் இந்தியா விமான பயணிகள் விமானம் கடைசி நேரத்தில் ரத்து ஆனதால் கடும் அவதிக்கு உள்ளாகினர். வான்கூவரில் இருந்து டெல்லிக்கு வர இருந்த ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து ஆனது. இதனால், 20 முதல் 25 மாணவர்கள் டெல்லி வர முடியாமல் தவித்தனர். ஏற்கனவே பயண நேரம் இருமுறை மாற்றி அமைக்கப்பட்டு மூன்றாவது முறையாக ரத்து ஆகியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.