சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு `கங்குவா’ முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் ஏராளமான ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என சூர்யா, சிவா கூட்டணி உறுதிப்படுத்தியிருப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.
இந்நிலையில் ‘கங்குவா’ பீரியட் ஃபிலிம் அல்ல என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/trtt.jfif.jpeg)
பத்து மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் ‘கங்குவா’ உருவாகி வருகிறது. ‘கங்குவா’ வெற்றிகரமாக வரவேற்பைப் பெற்றால், அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். கிளிம்ஸ் வீடியோவைப் பார்த்ததும், இந்தி உரிமை கோடிகளில் வியாபாரம் பேசப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். ‘கங்குவா’வில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். வசனங்களை மதன் கார்க்கி எழுதி வருகிறார். ‘இது சிவாவின் படம் மாதிரியே இருக்காது’ என பேட்டிகளில் அவர் சொல்லி, எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறார். சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி கேமராவை கவனிக்கிறார். தேவி ஶ்ரீபிரசாத் இசைமைத்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, மோஷன் போஸ்டர் வெளியானது. அதில் ‘இது ஒரு பீரியட் ஃபிலிம்’ என நேரடியாகவே உணர்த்தியுள்ளனர். கிளிம்ஸ் வீடியோவில், தீப்பந்தங்கள் எகிறி பறக்கும் காட்சிகளுடன் போர்களத்தில் நெருப்பு தகிக்கிறது. படத்தில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்கட்டார், பெருமனத்தார் என பலவிதமான கதாபாத்திரங்களில் சூர்யா வரவிருக்கிறார். படத்தில் 70 சதவிகிதம் பீரியட் போர்ஷனும், 30 சதவிகிதம் ஸ்பெஷல் போர்ஷனும் உண்டு என்கிறார்கள். போர்க்களக் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கி வருகிறார்கள். அதிலும் 3டி தொழில்நுட்பம் என்பதால், ஃபிரேம் பை ஃபிரேம் கிராபிக்ஸில் செதுக்கி வருகின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/disaa.jfif.jpeg)
சூர்யா இப்போது குடும்பத்தினருடன் லண்டனில் உள்ளார். பிறந்தநாளைக்கூட அங்கே தான் கொண்டாடினார் சூர்யா. இப்போது படப்பிடிப்பு இடைவேளை கிடைத்திருப்பதால், லண்டன் சென்றுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவர் திரும்பி வந்ததும், மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பைத் தொடருகின்றனர்.