ராமநாதபுரத்தை குறி வைத்த பாஜக: நேரடியாக களமிறங்கும் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்கள் உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. தமிழக அரசும் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி வருகிறது.

இலங்கை அதிபர் கடந்த வாரம் இரு நாள் பயணமாக இந்தியா வந்த போது இரு நாடுகளுக்கிடைய சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. தமிழக மீனவர்கள் விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபரை பிரதமர் மோடி வலியிறுத்தினார்.

இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (ஜூலை 25)கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி மாநில மாநாடு நடத்தவுள்ளது.

இம்மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த தகவலை மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

மோடி, விக்ரமசிங்கே சந்திப்பு; பரபரப்பு ஆலோசனை!

முதலமைச்சர் ராமநாதபுரம் சென்று மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறாரே ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளனவா என்று விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. “மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணிகளை சத்தமில்லாமல் தொடங்கிவிட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அந்த கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை பாஜக எதிர்பார்த்து களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி அங்கு போட்டியிடப்போவதாக கூட செய்திகள் கிளம்பின.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய சில அறிவிப்புகளை வெளியிடும் போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களிடத்தில் நல்ல விதமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என திமுக தரப்பு கணக்கு போடுகிறது” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.