ஊழல் ஒழிப்புச் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இலங்கை சமூகம் சீர்டையும்; என்று தான் கருதுவதாகவும், அது நிலைத்திருப்பது நடைமுறைப்படுத்துவதனூடாகவே இடம்பெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர்ரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
அரச நிறுவனங்களினுள், ஊழல் மோசடி, முறைகேடுகள் புற்று நோயாகப் பரவியுள்ளது. இதனால் எனக்குக் கீழுள்ள புகையிரதத் திணைக்களத்திலும் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து குற்றப்புலணாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைத்துள்ளேன்.
முன்னெப்போதும் இல்லாதவாறு கடுமையான நிபந்தனைகள் மற்றும் சரத்துக்களுடன் கூடிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வரும்போது பல விடயங்களைச் செயல்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும். அதற்கமைய இலஞ்சம் பெற்றாலும், இலஞ்சத்தினூடாக எதனையும் செய்ய முடியாது. ஏதேனுமொரு வங்கியில் அதனை வைப்பிலிட்டாலும் கூட, அது எவ்வாறு வைப்பிலிடப்பட்டது மற்றும் எதனூடாக கிடைக்கப்பெற்றது என்ற ஆதாரங்கள் காட்டப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
கார், வீடு, என்பவற்றை கொள்வனவு செய்தல், வெளிநாட்டுப் பயணங்கள், நிகழ்வுகள் மற்றும் செலவுகள் என்பன மேற்கொள்ளப்பட்டால், அவற்றை எந்த முறையில் சம்பாதித்தார்கள் என்பதை ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தத் தவறினால் ஊழல் மோசடிச் சட்டத்தின்ட கீழ் பெறும் தொகையொன்றை செலுத்த வேண்டி வரும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.