கடையில் செல்போன் பயன்படுத்திய பெண் ஊழியர்… பணிநீக்கம் செய்த உரிமையாளர்

சோஃபி அல்காக் என்ற 20 வயது பெண், மான்செஸ்டரின் விடிங்டனில் உள்ள இடெர்ரி டோஸ்ட் (Eatery Toast) என்ற கஃபேயில் ஜூலை 6-ம் தேதி வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அதன் முடிவுகளுக்காகக் காத்திருந்துள்ளார். அதனால் தனது விடுமுறை நாள்களில் கஃபேயில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், வேலை நேரத்தில் போன் பயன்படுத்தியதாகக் கூறி கஃபேயின் உரிமையாளர், சோஃபியை வேலையை விட்டு நீக்கியுள்ளார். ஆனால் நியாயமான காரணம் இல்லாமல் தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் சோஃபி.

பணிநீக்கம்

இதை பற்றி பேசியுள்ள சோஃபி, “நான் வேலை செய்யும் கடையின் உரிமையாளர் என்னை பணிநீக்கம் செய்த விதம் தொழில்சார்ந்ததாக இல்லை. நான் என் வேலையைச் சரிவர செய்து வந்தேன். குறித்த நேரத்தில் ஆர்டர்களை வெளியேற்றிவிடுவேன். மேலும் உரிமையாளரை இப்போதுதான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறேன். இதற்கு முன்னர் நான் நன்றாக வேலை செய்வதாகவே அவர் தொலைபேசியில் கூறினார். அப்படியிருக்கையில் நான் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.

என்னை பணி நீக்கம் செய்யப்போவது ஏற்கெனவே கடையில் உள்ள செஃபிக்கு தெரிந்துள்ளது. அவர் என்னிடம் வந்து உரிமையாளர் என்னிடம் ஏதாவது கூறினாரா, அவர் என்னை பணி நீக்கம் செய்யவுள்ளார் என சொன்னார், முதலில் இதை நம்பாமல் நான் நேரடியாக அவருக்கு மெயில் செய்து கேட்டேன், அவர் இனி நீ கடையில் வேலை செய்யத் தேவையில்லை என பதில் அளித்தார். பின்னர் நான் அவரை நேரில் சந்தித்தும் இதற்கான விளக்கத்தைக் கேட்டேன் அதற்கு அவர், நான் நான்கு மணி நேரம் எனது தொலைபேசியைப் பயன்படுத்தியபடி அமர்ந்திருந்ததாக பொய் கூறினார்.

கஃபே

அவரது கூற்றை பொய் என நிரூபிக்க, நான் எனது ஐபோனில் உள்ள ஸ்கிரீன் டைம் டிராக்கரை காட்டினேன், அதில் மொத்தமாகவே நான் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே போன் பயன்படுத்தியதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தினேன், அதுவும் ஓய்வெடுக்கும்போது கடைக்கு வெளியில்தான் பயன்படுத்தினேன். மீதி நேரம் என் வேலைக்கு முன்பும், பின்பும் பயன்படுத்தியுள்ளேன் , இப்படியிருக்க என் பணி நீக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என வேதனையுடன் கூறியுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள கஃபே நிறுவனம், “நாங்கள் ஆறு ஆண்டுகளில் சுதந்திரமான ஹைட்ரீட் கஃபேவாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு சிறந்த சூழலை உருவாக்க முயற்சிசெய்தோம். சோஃபி இரண்டு வாரங்கள் மட்டுமே பணியாளராக இருந்தார். அவர் வேலையில் இருக்கும்போது இங்கு கவனம் இல்லாமல் மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சோஃபி வேலை செய்த நாள்களுக்கான ஊதியம் அவருக்கு வழக்கப்படும். எதிர்காலத்தில் அவர் நலமுடன் இருக்க வாழ்த்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.