சென்னை: ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி20அமைப்பின் 2022-23-ம் ஆண்டுக்கான தலைமைபொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக,பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில், ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்றுதொடங்குகிறது. இது தொடர்பாகமத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்அமைச்சக கூடுதல் செயலர் சிர்சா சர்மா கூறியதாவது: ஜி20 மாநாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
26, 27 தேதிகளில் நடைபெறும் கூட்டங்களில் நிலம் அழிந்துபோவது, சூழலியல் மீட்டெடுப்பு, பல்லுயிர் பரவல், நீராதாரங்கள் பாதுகாப்பு, நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 28-ம் தேதி ஜி20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் 35 பேர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் உரையாற்றுகின்றனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் தமிழக கலை மற்றும் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்ளும் விதமாக மாமல்லபுரம் செல்கின்றனர்.