தமிழ்த் திரையுலகம் பரிசீலிக்க வேண்டும் : பெப்ஸி அமைப்புக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

பெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் திரைப்படத் தயாரிப்புகளில் சில புதிய முடிவுகளை எடுத்து அதை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர். தமிழ்ப் படங்களில் தமிழ்க் கலைஞர்களையே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவும் அதில் ஒன்று. தேவைப்பட்டால் மட்டுமே மற்ற மாநிலங்களிலும், நாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பது மற்றொன்று. இவை இரண்டும் மற்ற மொழி திரையுலகனரிடம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் பல படங்கள் ஐதராபாத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. அதனால், அங்கு படப்பிடிப்பு நடக்கும் தமிழ்ப் படங்களில் தமிழகத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால்தான் பெப்ஸி மேற்கண்ட இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் நேற்று ஐதராபாத்தில் நடந்த 'ப்ரோ' பட விழாவில் விமர்சித்திருந்தார்.

அவர் பேசுகையில்,“இந்த விவகாரம் குறித்து தமிழ்த் திரையுலகம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது ஆட்களை வைத்து மட்டுமே ஒரு வேலையை செய்ய வேண்டுமென யாரும் நினைக்கக் கூடாது. வேறு மொழிகளிலிருந்து கவலைஞர்கள் பங்கேற்றதால்தான் தெலுங்கு திரையுலகம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. மற்ற மொழிகளிலிருந்து ஒன்றாக வந்துதான் சினிமா உருவாகிறது. தமிழ் சினிமாவில் தமிழ்க் கலைஞர்கள் மட்டுமே பங்கற்க வேண்டும் என்ற புதிய முடிவைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.

குறுகிய மனநிலையுடன் இல்லாமல் பெரிதாக யோசிக்க வேண்டும். அப்படி இருந்தால் தமிழ் சினிமா 'ஆர்ஆர்ஆர்' போன்ற சர்வதேச படத்தையும் கொடுக்க முடியும். கலைஞர்களுக்கு சாதி, மதம் என எதுவும் கிடையாது.

'ப்ரோ' படத்தை தமிழரான சமுத்திரக்கனி இயக்கியிருக்கிறார், மலையாளியான சுஜித் வாசுதேவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், படத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த ஊர்வசி ரவுட்டேலா நடித்துள்ளார், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட நீதா லுல்லா ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். இப்படி அனைத்து பகுதியிலிருந்து கலைஞர்கள் பங்கேற்றால்தான் சிறந்த படத்தைக் கொடுக்க முடியும். 'ப்ரோ' படத்தை இயக்குவதற்காக சமுத்திரக்கனி தெலுங்கு படிக்கக் கற்றுக் கொண்டார். நானும் விரைவில் தமிழ் படிக்கக் கற்றுக் கொண்டு தமிழில் பேசுவேன்,” என்றார்.

பெப்ஸி சங்கத்தின் தலைவராக இயக்குனர் ஆர்கே செல்வமணி இருக்கிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா அமைச்சரான ரோஜாவின் கணவர். ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்து வருபவர் பவன் கல்யாண். எனவே, இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் கையாள முயற்சிக்கிறார் பவன் கல்யாண் என்றும் கோலிவுட்டில் கூறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.