கேன்பெர்ரா: மேற்கு ஆஸ்திரேலியாவில் அல்பானிக்கு கிழக்கே செயின்ஸ் கடற்கரையில் அதிக அளவில் ‘பைலட் திமிங்கலங்கள்’ கரை ஒதுங்கியிருக்கிறது. இதனை மீண்டும் கடலுக்கு திருப்பி விடும் பணியில் வனவிலங்கு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் கடந்த திங்கட்கிழமை இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை பார்த்தோம். நாங்கள் பார்க்கும் போது 20 வரைதான் இருந்தது. ஆனால் நேரம் போக போக இந்த எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது 70 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றை கடலில் திருப்பி விட நாங்கள் முயன்று வருகிறோம். ஆனால் முடியவில்லை. எங்களுடன் தன்னார்வலர்களும் சேர்ந்திருக்கிறார்கள். முடிந்தவரை அவற்றை கடலில் சேர்க்க போராடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “நாங்கள் கடற்கரையில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென கூட்டமாக கருப்பு நிறத்தில் ஏதோ கரை ஒதுங்குவதை எங்களால் பார்க்க முடிந்தது. கடலில் இருப்பவர்களை முடிந்தவரை கடலில் இருந்தவர்களை நாங்கள் வெளியேற்றினோம். கொஞ்ச நேரம் கழித்துதான் அது மீன்கள் என்பதை எங்களால் உணர முடிந்தது. இது டால்பின்களாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தோம். ஆனால் வனவிலங்கு அதிகாரிகள் இதனை திமிங்கலங்கள் என்று கூறினர்.
பின்னர் அதிகாரிகளுடன் சேர்ந்து நாங்களும் அதனை கடலில் தள்ளிவிட முயன்றோம். ஆனால் அவை கடலுக்கு போகவில்லை” என்று கூறியுள்ளனர். இதே போல கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தெற்கே உள்ள ஹாமெலின் விரிகுடாவில் 130க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழந்தன. இதற்கு முன்னர் 1996ம் ஆண்டில் 320 நீண்ட துடுப்பு பைலட் திமிங்கலங்கள் டன்ஸ்பரோவில் சிக்கித் தவித்தன. பொதுவாக இந்த திமிங்கலங்கள் 20-30 வரை கூட்டமாக வாழும். அல்லது சில நேரங்களில் 100 வரை கூட கூட்டமாக வாழும்.
இப்படி இருக்கையில் இவை ஒன்றுக்கொண்டு ஒலி மூலம் மட்டுமே தொடர்பு கொள்கின்றன. இவை எழுப்பும் ஒலிகள் மிகவும் மெதுவானவையாகும். ஆனால் கடலில் போர் கப்பல்கள் வெடி குண்டுகளை வீசி பயிற்சி செய்வது, சரக்கு கப்பல்கள் கவிழ்வதால் ஏற்படும் மாசு இந்த திமிங்கலத்தின் காதுகளில் உள்ள சென்சார் கருவியை பாதிக்கிறது. மனிதர்களின் காதுகளிலும் ஒரு வித திரவம் இருக்கும். இது நாம் சரியாக நடப்பதற்கு பயன்படுகிறது.
அதேபோல பைலட் திமிங்கலத்தின் காதுகளில் உள்ள இந்த சென்சார், அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளவும், சரியான பாதையில் பயணிக்கவும் பயன்படுகிறது. மனிதர்கள் உருவாக்கும் ஒலி மாசு இந்த சென்சார்களை பாதிக்கிறது. எனவே இது தற்போது கரை ஒதுங்கியுள்ளது.