தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தொடர்ந்து திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் முதல் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார் அண்ணாமலை.
மெட்ரோ திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள குற்றம்சாட்டி வரும் அண்ணாமலை இது தொடர்பாக சிபிஐ விசாரித்தால், முதல்வர் சிறைக்கு செல்வது உறுதி என்றும் கூறி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திமுக ஃபைல்ஸ் 1 என்ற பெயரில் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் உண்மையில்லை என திமுக எம்பி டிஆர் பாலு உட்பட பலரும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை சட்டரீதியாக சந்தித்து வருகிறார் அண்ணாமலை,
இந்நிலையில் திமுக ஃபைல்ஸ் பார்ட் 2 தயாராக உள்ளது, விரைவில் வெளியிடப்படும் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் ஆர்என் ரவியை அண்ணாமலை சந்திக்க உள்ளார் என காலை முதலே தகவல் வெளியானது.
அதன்படியே இன்று மாலை ஆளுநர் ஆர்என் ரவியை, ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது திமுக ஃபைல்ஸ் 2 ஆவணங்களை பெரிய சைஸ் இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநரிடம் வழங்கினார் அண்ணாமலை. இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இன்று தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்தாக குறிப்பிட்டுள்ளார். திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள் மற்றும் முதல் குடும்பம் 5600 கோடி ரூபாய் மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்களுடன் திமுக கோப்புகளின் பகுதி 2 சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் ஆளுநர் ஆர்என் ரவி தலையிட்டு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுதாகவும் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திமுக ஃபைல்ஸ் 1 பகுதியை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுக ஃபைல்ஸ் 2 ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ள அண்ணாமலை 5600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக புகார் அளித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.