மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும், பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும், அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்திவருகின்றன. ஆனால், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி இன்றோடு ஐந்து நாள் கூட்டங்கள் நடைபெற்றும், மணிப்பூர் தொடர்பாக ஒரு விவாதம் நடத்தாத மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் தான் விவாதம் நடத்த ஒத்துழைக்க மறுக்கிறது என எதிர்வாதத்தை முன்வைக்கிறது.
அதேசமயம், பிரதமர் மோடி மணிப்பூர் விவாகரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பேசாமல், எதிர்க்கட்சிகளின் `இந்தியா (I.N.D.I.A)’ என்ற கூட்டணி என்ற பெயரைத் தீவிரவாத அமைப்பு, கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒப்பிட்டு விமர்சிக்கிறார். பிறகு இதற்கு எதிர்மாறாக, மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கடிதம் எழுதியிருக்கிறார்.
இவ்வாறிருக்க, காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பது பல ஆண்டுகளாகத் தெரிந்த ஒன்று தான் என்றும், இப்போது மோடி, அமித் ஷாவின் செயலால் ஆளுங்கட்சிக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லை என்றும், அமித் ஷாவுக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “நாட்டின் எதிர்க்கட்சிகளைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடனும், பயங்கரவாதக் குழுவுடனும் இணைத்து மோடி விமர்சிக்கும் அதே நாளில், உள்துறை அமைச்சர் அமித் ஷா உணர்ச்சிகரமான கடிதம் எழுதி எதிர்க்கட்சிகளிடமிருந்து நேர்மறையான அணுகுமுறையை எதிர்பார்க்கிறார். ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது பல ஆண்டுகளாகத் தெரிந்த விஷயம்தான். ஆனால், இப்போது அது ஆளுங்கட்சிக்குள்ளேயும் தொடங்கியிருக்கிறது.
மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா-வை சரியான இலக்கு அற்றது என்று மோடி அழைப்பது அபத்தமானது மட்டுமல்லாமல் துரதிர்ஷ்டவசமானதும் கூட. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மோடி, நாடாளுமன்றத்துக்கு வந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை அவர் அப்படிச் செய்வது அவரின் மரியாதையைக் குறைத்துவிடும் போல. இருப்பினும், நாட்டு மக்கள் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது. அதற்காக எத்தகைய விலையையும் நாங்கள் கொடுப்போம்” என்று அமித் ஷாவிடம் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.