லண்டன் : பிரிட்டன் – இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்தின் கீழ் விசா பெறுவதற்கான இரண்டாவது வாக்கெடுப்பை பிரிட்டன் அரசு நேற்று துவங்கியது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த இளைஞர்கள் இந்தியாவுக்கும் இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் பிரிட்டனுக்கும் சென்று படிக்கவும் பணியாற்றவும் பிரிட்டன் – இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டம் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.
கடந்த ஆண்டு நவ., மாதம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நடந்த ‘ஜி – 20’ மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஆண்டுக்கான திட்டத்தில் 3000 விசாக்களை பிரிட்டன் அரசு அளிக்கிறது. இந்த விசாக்களை பெறுவதற்கான முதல் வாக்கெடுப்பு பிப்., மாதம் முடிவடைந்தது.
மீதி உள்ள இடங்களுக்கான இரண்டாவது வாக்கெடுப்பு நேற்று துவங்கியது.
இந்தியாவை சேர்ந்த 18 – 30 வயது வரையுள்ள இளைஞர்கள் நாளை மதியம் 1:30 வரை இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த இளைஞர்கள் இதற்கு தகுதி பெறுகின்றனர்.பிரிட்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க திட்டம் உள்ளவர்கள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும்.
இதில் தேர்வு பெறும் பட்சத்தில் பிரிட்டன் விசா பெற 27 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் பிரிட்டன் சென்று படிக்க அல்லது பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான பொருளாதார வசதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இவை தவிர சுகாதார கட்டணமாக 99 ஆயிரம் ரூபாயும் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இளைஞரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் 2.50 லட்சம் ரூபாய் சேமிப்பும் இருக்க வேண்டியது அவசியம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement