மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகிலுள்ள ஹடப்சர் என்ற இடத்தில் வசிப்பவர் இம்தியாஸ் ஹசீன் (Imtiaz Haseen) . இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்தார். ஆனால் அந்த நபரால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இம்தியாஸ் ஹசீன் பணம் வாங்கிய நபரையும், அவரது மனைவியையும் கொலைசெய்து விடுவதாக மிரட்டினார். அதோடு கணவன் மற்றும் மனைவியை ஹடப்சரில் உள்ள மஹாடா காலனியில் இருக்கும் கட்டடத்துக்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.
பணம் வாங்கிய நபரும், அவரின் மனைவியும் சேர்ந்து இம்தியாஸ் ஹசீன் சொன்ன இடத்துக்குச் சென்றனர். அங்கு பணம் வாங்கிய நபரின் 34 வயது மனைவியை அவரது கணவர் முன்னிலையில் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். அதோடு இந்த நிகழ்வை தனது மொபைல் போனில் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார்.
அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி, பல முறை அப்பெண்ணை தனது ஆசைக்கு இணங்க வைத்தார். முதன்முறையாக பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. ஆனால் திடீரென இம்தியாஸ் ஹசீன் தனது மொபைல் போனில் இருந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விட்டார். வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது.
உடனே இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு இம்தியாஸ் ஹசீனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இம்தியாஸ் மொபைல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இம்தியாஸ் இது போன்று வேறு எதாவது பெண்ணிடம் நடந்து கொண்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.