வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அக்.,15ம் தேதி மோத உள்ள நிலையில், நவராத்திரியின் முதல்நாள் என்பதால் போட்டி நடைபெறும் தேதி மாற்றப்படும் என செய்தி வெளியானது. ஆனால், இதுவரை தேதி மாற்றப்படவில்லை என்றும், இது குறித்து 2, 3 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியானது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்.,15ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஆனால் அக்.,15ல் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் துவங்குவதால் பாதுகாப்பு காரணங்களை கொண்டு, போட்டியை ஒரு நாளுக்கு முன்னதாக அக்.,14ல் நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின.
இது குறித்து அதிகாரிகளுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்டோபர் 15ம் தேதி ஆமதாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டியின் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு எடுக்கப்படும்.
அதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஆனாலும், 3 ஐ.சி.சி உறுப்பினர்கள் தேதியை மாற்றுமாறு ஐசிசி.,யிடம் கேட்டுள்ளனர். எனவே அட்டவணையில் மட்டும் சிறிய மாற்றங்கள் இருக்கலாம், மைதானம் மாற்றப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement