பல வருடங்களுக்கு முன்னர் பாண்டிசேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பிரெஞ்சு கேஸில் எனும் பங்களா இருக்கிறது. அதில் சூதாட்டத்தை நடத்தி வரும் பிரஞ்சு குடும்பம், ‘வின் ஆர் ரன்’ என்னும் போட்டியை நடத்தி தோற்பவர்களைக் கொடூரமாகக் கொலை செய்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள், கலவரம் செய்து அவர்களைக் கொல்கிறார்கள். அவர்கள் அங்கேயே பேய்களாக உலாவத் தொடங்குகின்றனர். நிகழ்காலத்தில் பாண்டிச்சேரியில் பார் ஓனராக இருக்கும் பெப்சி விஜயனிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை பிபின் மற்றும் முனிஷ்காந்த் கூட்டணி கொள்ளை அடிக்கிறது. அதே வேளையில் போதைப் பொருள் விற்கும் இந்தக் கூட்டணியின் பணத்தை ‘மொட்டை’ ராஜேந்திரன் கூட்டணி திருடத் திட்டம் தீட்டுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/64ae52cba4a11.jpg)
மறுபக்கம் சில ட்விஸ்ட்களால் பெப்சி விஜயனின் மகனான ரெடின் கிங்ஸ்லிக்கும் நாயகி சுரபிக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது. இதனால் சுரபியின் காதலரான சந்தானம் கிங்ஸ்லியைக் கடத்துகிறார், மறுபுறம் பெப்சி விஜயன் சுரபியைக் கடத்துகிறார். குழப்பமாக இருக்கிறதா? இவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. சந்தானம், சுரபி மற்றும் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் அனைவரும் அந்த பிரெஞ்சு கேஸிலுக்குச் சென்று பேய்களோடு கேம் ஆடி ஜெயித்தனரா, இல்லையா என்பதை ஹாரர் காமெடியாகச் சொல்லியிருப்பதே இந்த ‘டிடி ரிட்டன்ஸ்’ (DD Returns).
ஈவென்ட் மேனேஜராக சதீஷ் எனும் கதாபாத்திரத்தில் சந்தானம். ரைமிங் ஒன் லைனர், பேய்களை நக்கலாகக் கலாய்ப்பது, சற்று சீரியஸான காட்சிகளில் முக பாவத்தை மாற்றுவதெனச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்மேல் வைக்கப்பட்ட உருவகேலி புகாருக்குச் சுயபரிசோதனை செய்து கொண்டு அவற்றைத் தவிர்த்துச் சிரிக்க வைத்ததற்குப் பாராட்டுகள். குறிப்பாக அதை வசனமாகவும் வைத்துக் கலாய்த்திருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி, பிபின், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், லொள்ளு சபா மாறன், சைதை சேது, டைகர் தங்கதுரை, தீபா எனப் பெரிய பட்டாளமே நகைச்சுவை தர்பார் செய்துள்ளனர். வில்லனாக வரும் பெப்சி விஜயனும் “டேய்டேய்டேய்டே” என மாடுலேஷனில் ரசிகர்களைக் கிச்சு கிச்சு மூட்டுகிறார். பேய்களாக வரும் பிரதீப் ராவத், பேபி மான்ஸ்வி, மஸூம் சங்கர் ஆகியோரும் தங்களுக்கான பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
கதை ஆரம்பிக்கப்பட்ட இடத்திலிருந்து கிளைக்கதைகளாகப் பல இடங்களில் பிரிந்தாலும் நேர்த்தியான திரைக்கதையால் ஒரு புள்ளியில் இணைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த். சொல்வதற்குக் குழப்பமான கதையை வரிசைப்படுத்திய காட்சியமைப்பும், அதனையே நகைச்சுவையாக மாற்றியதும் பாராட்டுக்குரியது. ஆனால், பங்களாவை அடைவதுதான் இலக்கு என்று தெரிந்த பின்னர் காட்சிகளின் அளவைச் சற்றே குறைத்திருக்கலாம். இருப்பினும் காமெடி க்ளிக்கானாதால் அரங்கம் அதிரும் நகைச்சுவையோடு முடிகிறது முதல் பாதி.
இனி பேயோடு கேம் என்று நுழையும் இரண்டாம் பாதி, தானாகக் கதவு திறப்பது, தீடீரென பேய் கண் முன் வந்து நிற்பது, அமைதியாக இருந்து சற்றெனப் பயங்கரமான சவுண்ட் எஃபக்ட்ஸ் வருவது என்ற பேய் பட டெம்ளேட்களைக் கிடாசிவிட்டு புதுமையான அனுபவத்தைத் தருகிறது. “மரணம் அல்லது பணம்” என உயிரைப் பணயம் வைத்து ஆடும் வியூகம் ‘Squid Game’ வெப் சிரியஸை கதை ஞாபகப்படுத்த, தந்திரமாக அதையும் வசனத்தில் கலாய்த்திருக்கிறார் சந்தானம்.
கொஞ்சம் பிசகினாலும் சீரியஸான உணர்வைத் தந்துவிடும் காட்சிகளில் காமெடியைத் தவறாமல் புகுத்தி ஜாலி கேலி செய்திருக்கிறார் இயக்குநர். அதற்குப் பக்கபலமாக இருந்த சந்தானம் உள்ளிட்ட கதைக் குழுவிற்குப் பாராட்டுகள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/64ae52bc62202.jpg)
ஒளிப்பதிவில் முதல் பாதியில் பாண்டிச்சேரியின் சுற்றுப்புறங்களில் பெரியளவில் ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் பங்களாவுக்குள் வித்தியாசமான கேமரா கோணங்களால் அசத்துகிறார் ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதி. சிக்கலாக அங்குமிங்கும் நகரும் கிளைக்கதைகளை ஒரே கோர்வையாகக் கோர்த்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த். ஜோர்தாலே புகழ் ஆஃப்ரோ (ரோஹித் ஆப்ரஹாம்) இசையமைப்பாளராகக் களமிறங்கியுள்ளார். சந்தானத்தின் இன்ட்ரோ சாங்கில் கானாவில் வெஸ்டர்ன் ஆர்கெஸ்ட்ராவை இணைக்கும் ஃபியூஷன் புது முயற்சி. பின்னணி இசையும் கதையின் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது.
சண்டைக் காட்சிகளுக்கு ஹரி தினேஷ் சிறப்பான வடிவமைப்பைத் தந்திருந்தாலும் சந்தானத்திடம் தடுமாற்றம் துண்டாகத் தெரிகிறது. பாழடைந்த பேய் பங்களா, சூதாட்ட போர்டு விளையாட்டுக்கான மேஸ் (maze), பிரமாண்ட புத்தக அலமாரி என கலை இயக்கத்தில் மெனக்கெட்டிருக்கிறார் ஏ.ஆர். மோகன். ஆனால், கலை இயக்கத்துக்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அரண்மனையின் கதவைப் பிடித்து சந்தானம் தொங்கும் காட்சி, பேய்களின் சண்டைக் காட்சி போன்றவற்றில் கிராபிக்ஸ் சுமார் ரகம்.
மொத்தத்தில், ஹாரர் காமெடி ஜானரென்றால் கதை தேவையில்லை என்ற எழுதப்படாத சுதந்திரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல், கதையையும் கதாபாத்திரங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி அதில் உருவக் கேலி, அடல்ட் காமெடியைப் பெருமளவு தவிர்த்து வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறது இந்த `டிடி ரிட்டன்ஸ்’.