ராமேஸ்வரம்: இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாட்டில் பாஜகவைவலுப்படுத்த அண்ணாமலை வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது மாபெரும் பாத யாத்திரையை தொடங்கினார்.
“என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் இந்த பாதயாத்திரை அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறும். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதைக் குறிவைத்து இந்த பாத யாத்திரையை அண்ணாமலையை ஆரம்பித்துள்ளார்.
இதனை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று மாலை ராமேஸ்வரத்தில் நடந்த மிக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா அண்ணாமலையின் பாத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் திமுகவையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதற்கிடையே இன்று அதிகாலை 5.40 மணியளவில் மத்திய அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் அதிகாலையில் ராமநாதசுவாமி சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது விடுதியில் இருந்து கோயிலுக்கு போலீஸ் அழைத்து வந்தனர். ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் அமித் ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது அமித் ஷா உடன் மத்திய அமைச்சர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதகிருஷண்ன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
அதிகாலை பூஜை நடைபெற்ற நிலையில் அமித் ஷா கோயிலுக்கு வந்திருந்தார், முதலில் மூலவரை வணங்கிய அமித் ஷா, அதன் பிறகு ஸ்படிக லிங்கம் மற்றும் அம்மனையும் அவர் வணங்கினார். காலை 6 மணி முதல் 7 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்பதால் அதற்கு முன்பு அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வரும் சமயத்தில் மட்டும் பொதுமக்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டிற்குச் செல்கிறார். பிறகு நாளை காலை 11 மணிக்குத் தங்கும் விடுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறார். பிற்பகல் 12.05 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் அமித் ஷா, பிற்பகல் 12.40 மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்துக்குச் செல்கிறார். இவை தான் ராமேஸ்வரத்தில் அமித் ஷா கலந்து கொள்ளும் நிகழ்வுகளாகும்.
அதைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அமித் ஷா, பிற்பகல் 2 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லிக்குக் கிளம்புகிறார்.