சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக, மத்திய உள்துறை உத்தரவின்படி, மாவட்டம், தாலுகா, காவல்நிலைய எல்லை விரிவாக்கம் இந்தாண்டு டிசம்பர் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பொதுத்துறை அறிவித்துள்ளது.
இதுபற்றி அரசிதழில், பொதுத்துறை செயலர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிக்கை: மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரகம் தற்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால்,சம்பந்தப்பட்ட வட்டம், மாவட்டத்தின் எல்லையில் எவ்வித மாற்ற மும் செய்யப்படக் கூடாது.
இந்நிலையில், கடந்த 2020-ம்ஆண்டு இப்பணிகள் தொடங்கப்பட்ட போது, முன்னதாக 2019-ம்ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழகத்தில் 2020 ஜன.1முதல் மார்ச் 31-ம் தேதி வரை, நகராட்சிகள், வருவாய் கிராமங்கள், நகரங்கள், வட்டங்கள், காவல்நிலையங்கள், உள் சரகங்கள், மாவட்டங்கள் ஆகிய நிர்வாகஅலகுகளுக்கான எல்லைகளை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், புதிய அலகுகள் உருவாக்கம் தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்பின், 2020-ம் ஆண்டு செப்டம்பர், 2021-ல் பிப்ரவரி, ஆகஸ்ட், 2022-ல் ஜனவரி, ஜூலை மற்றும்இந்தாண்டு ஜனவரி மாதங்களில்வெளியிடப்பட்ட அரசாணைகளின் படி, இந்த நிர்வாக அலகுகளின் எல்லை விரிவாக்கம் நிறுத்திவைப்பு என்பது இந்தாண்டு ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரக கூடுதல் பதிவாளர் ஜெனரல்,கடந்த ஜூன் 30-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், நிர்வாக அலகுகளின் எல்லை விரிவாக்கம் நிறுத்திவைப்பு டிச.31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், புதிய அலகுகள் உருவாக்கத்துக்கான தடை நீடிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
ஏதேனும் எல்லை மாற்றம் தொடர்பான கருத்துருக்கள் நிலுவையில் இருந்தால் டிச.31-ம் தேதிக்குள் தமிழக கணக்கெடுப்பு பணிகளுக்கான இயக்குநரிடம் தெரிவிக்க வேண்டும்.
எனவே, வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக டிஜிபி, ஊரக வளர்ச்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சிகளின் ஆணையர்கள் அரசின் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.