வீடு, நகைகளை அடகு வைத்து படம் எடுத்துள்ளேன் : மலையாள 'ஜெயிலர்' பட இயக்குனர் கண்ணீர்

ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை பிரமாண்டமாக நடக்கிறது. இந்த நேரத்தில் மலையாளத்தில் வெளிவரும் 'ஜெயிலர்' பட இயக்குனர் ஷகிர் மாடத்தில் வீட்டையும், நகைகளையும் அடமானம் வைத்து படம் எடுத்திருப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: எங்கள் 'ஜெயிலர்' ஒரு பீரியட் படம். 1957 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, த்ரில்லர் பாணியில் உருவாகப்பட்டுள்ளது. 5 கிரிமினல்கள் ஒரு ஜெயிலரை கொல்லத் துடிகிறார்கள். அவர்கள் ஜெயிலரை கொன்றார்களா, அல்லது திருந்தினார்களா என்பதுதான் படத்தின் கதை. தயன் சீனிவாசன் ஜெயிலராகவும் மலையாளத்தின் முன்னணி காமெடி நடிகர்கள் 5 பேர் கிரிமினல்களாக நடித்துள்ளார்கள்.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கேரளத் திரைப்பட சங்கத்தில் 'ஜெயிலர்' தலைப்பைப் பதிவு செய்தேன். ரஜினியின் ஜெயிலர் தலைப்பு 2022ம் ஆண்டு மே மாதம்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஜினி படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதினேன். 'ஜெயிலர்' படத்தின் தலைப்பை ஒட்டுமொத்தமாக நான் மாற்றச்சொல்லவில்லை. கேரளாவில் மட்டும் படத்தின் தலைப்பை மாற்றி வெளியிடும்படி தான் கோரிக்கை வைத்தேன்.

நான் இந்தப் படத்தின் இயக்குநர் மட்டுமல்ல. படத்தையும் தயாரிக்கிறேன். ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியான பிறகு எனது படம் வெளியானால் யார் பார்ப்பார்கள் என்று விநியோகஸ்தர்கள் கேட்கிறார்கள். அதோடு படத்தில் மோகன்லாலும் நடித்துள்ளார். அதனால்தான், ரஜினியின் 'ஜெயிலர்' வெளியாகும் அதேநாளில் எங்கள் படத்தையும் வெளியிட முடிவெடுத்தோம்.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு 5 கோடி ரூபாய் செலவானது. எனது வீட்டையும் மகள்களின் நகைகளையும் அடைமானம் வைத்துள்ளேன். காரை விற்றுவிட்டேன். வங்கியில் லோன் போட்டு கடன் வாங்கியுள்ளதோடு வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். வட்டி கட்டவே சிரமமாக உள்ளது. எனது எதிர்காலமே 'ஜெயிலர்' படத்தில்தான் அடங்கியிருகிறது. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட ஏற்பட்டிருகிறது. தற்போது தலைப்பு தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இப்போதும் நான் கேட்பது மலையாளத்தில் மட்டும் தலைப்பை மாற்றுங்கள் என்றுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.