பியூனஸ் அயர்ஸ்: கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளில் புரண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எங்குப் பார்த்தாலும் கிரிப்டோகரன்சி குறித்தே பேச்சாக இருந்தது. கிரிப்டோகரன்சி தான் இனி உலகை இயக்கப் போகிறது என்றெல்லாம் பலரும் கூறினர். அப்போது பிட்காயின் தொடங்கி அனைத்து கிரிப்டோகரன்சிகளும் புதிய உச்சத்தைத் தொட்டது.
இருப்பினும், எப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த தொடங்கியதோ அப்போது முதலே கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினர்.
படுகொலை: இதனால் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்தோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களில் மிக மோசமாக நஷ்டமடைந்து வருகின்றனர். இதற்கிடையே கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளைச் சம்பாதித்த அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக இவர் மாயமான நிலையில், கடந்த புதன்கிழமை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீர்நிலைக்கு அருகே ஒரு சூட்கேஸில் அல்கபாவின் உடல் பாகங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
என்ன நடந்தது: அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தான் முதலில் இந்த சூட்கேஸை கவனித்துள்ளனர். அதை ஆர்வ மிகுதியில் அவர்கள் திறந்த நிலையில், உள்ளே முழுக்க உடல் உறுப்புகள் இருந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் பின்னரே இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. அவரது ஒரு கை அருகில் இருந்த ஒரு நீர்நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது கொலை செய்யப்பட்ட பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் மாயமாகியிருந்தார். தனித்தனியாக இருந்த தலை மற்றும் உடல் பகுதியை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது உடல் உறுப்புகள் மிகக் கச்சிதமாகத் துண்டிக்கப்பட்டு இருப்பதால் நிச்சயம் இதையே வேலையாக வைத்திருக்கும் ஒருவரே இந்த படுகொலையைச் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரேதப் பரிசோதனை: பெரெஸ் அல்காபாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டும் முன்பு அவரது தலையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடல் உறுப்புகள் தனித்தனியாக வெட்டப்பட்ட போதிலும், அவரது கைரேகை மற்றும் உடலில் இருந்த டாட்டூ மூலம் போலீசார் அவரை கண்டுபிடித்தனர்.
கிரிப்டோவில் முதலீடு செய்து பல கோடி சம்பாதித்த பெரெஸ் அல்காபா பார்சிலோனாவில் தான் முதலில் இருந்துள்ளார். அதன் பின்னர் சிலர் காரணங்களுக்காக அங்கிருந்து அவர், அமெரிக்காவின் மியாமியில் குடியேறியுள்ளார். இதற்கிடையே ஒரு வேலை காரணமாக அவர் அர்ஜென்டினா வந்த நிலையில், அங்கு வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
![Argentina Crypto Billionaire was murdered for unknown reasons Argentina Crypto Billionaire was murdered for unknown reasons](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot14700-1690610646.jpg)
போலீசார் சந்தேகம்: அங்கே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார் கடந்த ஜூலை 19ஆம் தேதி அவர் அந்த வீட்டை காலி செய்திருக்க வேண்டும். இருப்பினும், அவர் காலி செய்யவில்லை. அவருக்கு போன் செய்த போதும், மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்த நிலையில், தான் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி முதலீடு மட்டுமின்றி சொகுசு வாகனங்களை வாடகைக்கு விடுவது, இன்ஸ்டாகிராம் ஆகியவை மூலமும் இவர் பணத்தைக் குவித்துள்ளார். இருப்பினும் ஆடம்பர வாழ்க்கையால் இவர் பலரிடம் இருந்து பெருந்தொகையைக் கடனாக வாங்கியுள்ளார். கிரிப்டோகரன்சி சரிந்ததால் கடனை கட்ட முடியாமல் இவர் திணறி வந்த நிலையில், கடன் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.