கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகில் ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசு கடைக்கு பரவியதாக முதற் கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இதில் ராஜேஸ்வரி, பட்டாசு கடைக்காரர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருதீஷ் ஆகியோர் உள்பட 7 பேர் பலியாகினர். 9-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பட்டாசு கடையில் இருந்தவர்கள் உடல் தூக்கி வீசப்பட்டதால் அப்பகுதியில் உடல் பாகங்கள் சிதறி விழுந்தன. விபத்தின் போது ஓட்டலில் 4 பேர் இருந்ததாகத் தெரிகிறது. அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை
இந்நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திமுக எம்எல்ஏ மதியழகன், அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிகழ்விடத்தை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறுகையில்,” உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பட்டாசு கடைக்கும் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் இன்னும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா, மேலும் உயிரிழப்பு இருக்கிறதா போன்ற தகவல்கள் தெரியவரும்” என்றார்.
விபந்து நடத்த இடத்துக்கு அருகில் இருந்த பல வீடுகளில் கண்ணாடி உடைந்துள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் மீது கட்டிட இடிபாடுகள் சிதறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.