சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சு என்ற பெண், தனது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு பாகிஸ்தானில் உள்ள தனது சோசியல் மீடியா நண்பரை பார்க்க சென்றார். அங்கு சென்ற பிறகு தனது சோசியல் மீடியா நண்பரையே திருமணமும் செய்து கொண்டார். தற்போது ராஜஸ்தானில் இருந்து மேலும் ஒரு பெண் பாகிஸ்தானிற்கு புறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு மைனர் பெண் ஒருவர் பாகிஸ்தான் செல்வதற்காக வந்தார். அவர் விமான நிலையத்திற்கு செல்ல டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் கேட்டார். அவரை பார்த்தவுடன் டிக்கெட் கொடுப்பவர் சந்தேகம் அடைந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/1011468.jpg)
அவர் இது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அவரிடம் பாகிஸ்தான் செல்வதற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. தனது சொந்த ஊர் பாகிஸ்தான் என்றும், இந்தியாவில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து 3 ஆண்டுகளாக தங்கி இருப்பதாகவும், இப்போது மீண்டும் பாகிஸ்தான் செல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அவரின் பேச்சு சந்தேகத்தை கிளப்புவதாக இருந்தது.
அதோடு ஜெய்ப்பூரில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி விமான போக்குவரத்தும் கிடையாது. இதையடுத்து அப்பெண்ணை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்த போது அவர் ராஜஸ்தான் மாநிலம் சிகர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேலும் பாகிஸ்தானில் உள்ள வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் இப்பெண்ணிற்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்தித்து பேசவேண்டும் என்பதற்காகத்தான் அவர் விமானம் மூலம் பாகிஸ்தான் செல்ல விரும்பியது விசாரணையில் தெரிய வந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/love_parent.jpg)
பாகிஸ்தான் நண்பர்தான் அப்பெண்ணிடம் எப்படி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்றும், விமான நிலையத்தில் என்ன சொல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மைனர் பெண்ணிற்கு போலீஸார் கவுன்சிலிங் கொடுத்து அவரின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே பாகிஸ்தானை சேர்ந்த சீமா என்ற பெண் தனது குழந்தைகளுடன் இந்தியாவிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.