வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமியா பல்கலையில் படிக்கும் மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த நபர், பல்கலை காசாளர், பாதுகாப்பு அதிகாரி உட்பட சிலர் போலீசில் சிக்கி உள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான வீடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அந்நாட்டு அமைச்சரின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்து உள்ளது.
பாகிஸ்தானின் பஹவல்பூரில் இஸ்லாமியா பல்கலை. இங்கு படிக்கும் மாணவிகள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களை போதைக்கு அடிமையாக்கியதுடன், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.
இது மட்டுமல்லாமல், அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளுடன் பல்கலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 5,500 ஆபாச வீடியோக்கள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் சவுத்ரி தாரிக் பஷீர் சீமா என்ற பாகிஸ்தான் அமைச்சரின் மகனுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மேஜர் இஜாஜ் ஷா என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் போதை மருந்துகள் மற்றும் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பல்கலையின் காசாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இப்பல்கலையில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், மாணவிகளின் ஆபாச வீடியோவை வைத்திருந்தார்.
கைது செய்யப்பட்டவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகளை மிரட்டியதுடன், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட காசாளர், மாணவர்கள் மூலம் போதை மருந்துகளை வாங்கி விநியோகித்ததுடன் மட்டுமல்லாமல், டான்ஸ் மற்றும் செக்ஸ் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார். பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ள மற்றும் ஏழை மாணவிகளை குறிவைத்து இவர்கள் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.
இது தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் தலைமை அதிகாரிக்கு பல்கலை தலைவர் கடிதம் எழுதி உள்ளார். அந்நாட்டின் உயர்கல்வித் துறையும், உயர் மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement