Pizza 3 Review: `பேய் பழிவாங்கலாம்; படம் பழிவாங்கலாமா?!' பீட்சா -3 எப்படி இருக்கிறது?

சென்னையில் புதிதாக ஒரு உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் நலன் (அஸ்வின்). அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் மம்மி பொம்மையை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார். இதன் பின்னர் அங்கே தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க பேய்களிடம் பேசும் மொபைல் ஆப் தயாரிக்கும் ( என்னடா குறளி வித்தையெல்லாம் காட்டுறீங்க) ஆராய்ச்சியாளராக இருக்கிறார் அவரின் காதலியாக நடித்துள்ள பவித்ரா மாரிமுத்து.

Pizza 3

போலீஸ் அதிகாரியாக வரும் நாயகியின் அண்ணன் (கௌரவ் நாராயணன்) இவர்களது காதலுக்கு எதிரியாக இருக்கிறார். இந்நிலையில் நாயகனைச் சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பிக்கிறது. அது ஏன் நடக்கிறது? அதற்கு காரணம் என்ன? என்பதைத் திகிலாக சொல்ல முற்பட்டு இருப்பதே ‘பீட்ஸா 3 – தி மம்மி’ படத்தின் கதை.

Pizza 3

நாயகி பவித்ரா மாரிமுத்து “ ஹாய் நீங்க தான் பேயா! நான் தான் இந்த படத்தோட ஹீரோயின்” என்பது போல முகப்பாவனை கொடுப்பது கொடுமை. போலீஸ் அதிகாரியாக வரும் கௌரவ் நாராயணனின் கோபமான வசன உச்சரிப்பு சில இடங்களில் சிரிப்பினை வரவைக்கிறது.

உணவக ஊழியராக வரும் காளி வெங்கட், நாயகனுக்கு ஆறுதல் கூறுவது போல நடிப்பிலும் ஆறுதல் தருகிறார். இரண்டாம் பாதியில் அனுபமா குமார் பாசமான தாயாகவும், கொடுமையைக் கண்டு கதறும் உணர்வுபூர்வமான காட்சியிலும் சிறப்பான நடிப்பினைக் கடத்த முயற்சித்துள்ளார். இவரது மகளாக வரும் அபி நக்ஷத்ரவும் தனக்கு கொடுப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்துள்ளார். வில்லனாக வரும் கவிதா பாரதியிடம் சில காட்சிகளில் மிகை நடிப்பு எட்டிப்பார்க்கிறது.

Pizza 3

பேய் அல்லது திகில் படமென்றாலே “தெல்பத்ரிசிங் அந்த ஆட்டோக்கார தம்பி எங்க” என்பது போல எதாவது ஒரு பொம்மை கடை வாசலுக்கு சென்று விடுவார்கள் போல. இக்கதையிலும் அப்படி ஒரு மம்மி பொம்மையை வாங்கியுள்ளார்கள் இயக்குநர் மோகன் கோவிந்த். ஆனால் அந்த மம்மி பொம்மையினை வைத்து மம்மியைவிட அதர பழசான ஒரு பழிவாங்கும் கதையினை ரசிகர்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள். கதவு திறப்பது, சவுண்ட் கொடுப்பது, பேய் திடீரென வந்து முன்னாள் நிற்பது என்ற டெம்ளேட் காட்சிளாக இருந்தாலும், அதை கணிக்க முடியாத திரைக்கதையின் வடிவத்தில் கொடுப்பதே பேய் படத்தின் பலமாக இருக்கும்.

இந்த படத்தினை பொறுத்த வரை அப்படிப்பட்ட காட்சிகளை மட்டுமே நம்பி, திரைக்கதையே இல்லாத முதல் பாதியைத் தந்துள்ளனர். இதற்கு நடுவில் திரும்ப திரும்ப காட்டப்படும் சிவப்பு இனிப்பும், அதை பேய் சமைப்பது போன்ற காட்சிகளும் சலிப்பைத் தருகிறது. இது முதல் பாதி முடியும் முன்னரே இரண்டு படங்களை இடைவேளையே இல்லாமல் பார்த்த உணர்வினை தருகிறது. கதை ஆரம்பிக்கும் முன்னர் கூடைப் பந்தை வைத்து கொலை செய்யும் ஒரு காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அது எதற்கு என்று படம் முடிந்த பின்னரும் விளங்கவில்லை. மேலும் பேய் இருக்கிறதா இல்லையா? என்ற நியூஸ் டிபேட் காட்சிகள் சோதனை முயற்சி (நமக்கு தான்).

Pizza 3

இரண்டாம் பாதி ஆரம்பித்த உடனே இது வழக்கமான பழிவாங்கும் கதை என்பது தெரிந்துவிட்டது. பிளாஷ் பேக்கில் குழந்தைகள் மேல் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் குறித்த பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள். சமகாலத்தில் இப்பிரச்சனையின் தீவிரத் தன்மையை மையப்படுத்திச் சமூகத்திடம் விவாதங்களை எழுப்பும் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன, அதே நேரத்தில் அதீத நாடகத்தன்மையுடன் இருக்கும் இப்படத்தில் இது அவசியமற்றது என்ற எண்ணமே வந்தது.

இறுதியில் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பழிவாங்கும் நல்ல பேய், நாயகனுக்கு தொடர்புள்ள நபர்களையும் ஐசியூ செல்லும் அளவுக்கு துற்புறுத்துவது ஏன்? அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்படும் இரட்டை கொலைகள் எப்படி இவ்வளவு சாதாரணமாக மறைக்கப்பட்டன? போலீஸ் அதிகாரியாக வரும் நாயகியின் அண்ணன் ஒரு கொலையை விசாரிக்கக் கூட தனியாகவே வருவது எதற்காக?

Pizza 3

அந்த பொம்மை எப்படி உணவகத்துக்கு வந்தது? நூலகத்தில் இருந்து கொண்டு ஒருவர் நாயகன், நாயகிக்கு “பேய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?” என்று பாடம் நடத்தி கொண்டிருக்கிறார் யார் அவர்? என்று எக்கச்சக்க கேள்விகள் எழுகின்றன.

ஒளிப்பதிவில் இருள் நிறைந்த காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ். படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம். அருண் ராஜின் பின்னணி இசை, காட்சிகளில் வலுவிருந்தால் சிறப்பான அனுபத்தை தந்திருக்கும். படக்குழுவினர் பேய்களுக்கான மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் டிசைன் ஆகியவற்றில் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.

Pizza 3

இந்த படம் ஒட்டுமொத்தமாக முதல் பாதியில் திக்கு திசையின்றி நகர, இரண்டாம் பாதியில் வழக்கமான பழிவாங்கும் கதையாக முடிகிறது. ‘மை டியர் லிசா’ தொடங்கி ‘அரண்மனை சீரியஸ்’ வரை அரைத்த அதே மாவிலே சுடப்பட்டு இருப்பதால் இந்த ‘பீட்சா 3’ எவ்வகையிலும் ருசிக்க முடியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.