வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்துார்,: மத்திய பிரதேசத்தில் கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டவருக்கு, 40,000 பக்கங்களில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் இந்துாரைச் சேர்ந்த தர்மேந்திர சுக்லா என்பவர், இந்துார் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியிடம், ஆர்.டி.ஐ., வாயிலாக கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
இதில், கொரோனா காலத்தில், மருந்துகள், உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை வாங்கியது, அது குறித்த டெண்டர்கள், அதற்கான ரசீதுகள் ஆகிய விபரங்களை அவர் கேட்டிருந்தார்.
இது குறித்த பதில் ஒரு மாதத்துக்குள் வராததை அடுத்து, இதற்கான மேல்முறையீட்டு அதிகாரியான டாக்டர் ஷரத் குப்தா என்பவரை சுக்லா அணுகினார். இதைத் தொடர்ந்து, அனைத்து தகவல்களும் அவருக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
அடுத்த சில நாட்களில், மாநில சுகாதாரத் துறையின் அழைப்பின்படி அலுவலகம் சென்ற சுக்லாவுக்கு, 40,000 பக்கங்களில் பதில் அளிக்கப்பட்டது.
கட்டுக்கட்டாக கொடுக்கப்பட்ட ஆவணங்களால் அதிர்ச்சி அடைந்த அவர், அவற்றை சுமக்க முடியாமல் தன் சொகுசு காரில் எடுத்துச் சென்றார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியவருக்கு, 40,000 பக்கங்களில் பதில் அளிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை மட்டுமல்ல ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement