இம்பால்: மணிப்பூரில் பதற்றம் தணியாத நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கும் பணியை அம்மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரை பொறுத்தவரை ‘மெய்தி’ இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. மணிப்பூர் வன்முறையில் 150 பேருக்கு மேல் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு முற்றிலும் இயல்பு வாழ்க்கை முடங்கி அப்பாவி பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மணிப்பூர் வன்முறைக்கு அங்குள்ள சில குழுக்களுக்கு மட்டும் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் நாட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், மணிப்பூரில் சட்ட விரோதமாக இருக்கும் மியான்மர் மக்களின் பயோ மெட்ரிக் விவரங்களை சேகரிக்கும் பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று அம்மாநில உள்துறை தெரிவித்துள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ளும் மாநில அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவண அமைப்பு (NCRB) குழுவை உள்துறை அமைச்சகம் மணிப்பூர் அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு மணிப்பூரின் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக தங்யிருக்கும் மியான்மர் நாட்டு மக்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க உள்ளது.
முன்னதாக மணிப்பூரில் காடழிப்பு உள்ளிட்டவைகளுக்கு மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களே காரணம் என்று அம்மாநில முதல்வர் பிரேன்சிங் அப்பட்டமாக குற்றச்சாட்டியிருந்தார். இந்த நிலையில் மணிப்பூர் அரசு மேற்கொள்ளும் இந்தப் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.