பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு பாரம்பரிய மாமரங்களை, ஆர்கானிக் உரம் பயன்படுத்தி பராமரிக்கும் விவசாயியை, மத்திய, மாநில அரசுகள் பாராட்டி ஊக்குவித்துள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் வலம்பிலி மங்கலத்தைச் சேர்ந்தவர் சங்கரன் நம்பூதிரி, 66. இவர், பழங்களின் ராஜாவான மாம்பழத்திற்கு சரணாலயம் அமைத்து பராமரித்து வருகிறார்.இவர், மூன்றரை ஏக்கர் மாந்தோப்பில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியை பயன்படுத்தாமல், ஆர்கானிக் முறையில் 300க்கும் மேற்பட்ட மாங்கன்றுகளை பராமரித்து வருகிறார்.
அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாங்கன்றுகளை பராமரித்து வளர்க்கிறார். வட மாநிலங்களை சேர்ந்த மா வகைகள் மற்றும் பூர்வீக நாட்டு மாமரங்களை பாதுகாத்து வருகிறார். இதற்கு, மத்திய, மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து ஊக்கப்படுத்தியுள்ளன.
சங்கரன் நம்பூதிரி கூறியதாவது: கடந்த, 1976 முதல் தோப்பில் பல்வேறு வகையில் உள்ள மாமரங்களை பராமரித்து வருகிறேன்.விவசாய விஞ்ஞானி சுபாஷ் பலேக்கர் பாலக்காடு வந்தபோது, அவரது பயிற்சியில் கலந்து கொண்டு பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
லாபத்தை குறிக்கோளாக கொண்டு விவசாயம் செய்வதில்லை. 16 நாட்டு மாம்பழ வகைகளுக்கு ஜி.ஐ., (geography indication registry) மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளன. மேலும், ஆறு வகைகள் அங்கீகாரம் கிடைப்பதற்காக பதிவு செய்து காத்திருக்கிறேன். அவற்றில், ‘ராணி பசந்து’ போன்ற மாம்பழ வகைகளும் உள்ளன.
புகழ்பெற்ற மற்றும் விலை உயர்ந்த ‘கோஹிதுார்’ ‘மற்றும் ‘யு.பி., சவுசா’ மாமரங்களையும் பராமரித்து வருகிறேன்.முன்னாள் கேரள தலைமை செயலர் மொகந்தி, தோட்டத்தை பார்வையிட்டு பாராட்டியதோடு, பாரம்பரிய தாவர வகைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
காபி, ஏலக்காய், தென்னை, பாக்கு, பல்வேறு வகையான எலுமிச்சை, இந்திய ஜூஜூப் (எலந்தபழம்), ரம்புட்டான், சபர்ஜல்லி, மங்குஸ்தான், டிராகன் பழம், கொய்யா மற்றும் திராட்சை பழம் போன்றவையும் பயிரிட்டுள்ளேன்.விவசாயத்திற்கு தேவையான ஆர்கானிக் உரத்தை, பசு மாட்டின் கழிவுகளை சுத்திகரித்து உற்பத்தி செய்து பயன்படுத்துகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்