புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் தாரீக் மன்சூருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் அவருக்கு இரண்டு பதவிகள் அளிக்கப்பட்டதன் பின்னணி வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேசம் அலிகர் நகரின் பழம்பெரும் கல்வி நிலையம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். இங்கு, வட மாநில முஸ்லிம்களின் பெரும்பாலான முக்கிய முடிவுகளுக்கு வித்திடப்படுகிறது.
இதற்கு அக்கல்வி நிலையம் முஸ்லிம்கள் இடையே அதிக நன்மதிப்பை பெற்றிருப்பது காரணம். இச்சூழலில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான தாரீக் மன்சூர் கடந்த மே 15 இல் திடீர் எனத் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இத்துடன் அவர், தாம் பாஜகவில் இணைந்து சமூகப்பணி செய்வதாகவும் அறிக்கை அளித்திருந்தார். இதன் சில நாட்களில் டாக்டர்.தாரீக்குக்கு பாஜக சார்பில் உ.பி.,யின் மேல்சபை உறுப்பினராக்கப்பட்டார். இதன் மூன்றாவது மாதத்திலேயே மீண்டும் அவருக்கு பாஜகவின் தேசிய நிர்வாகக் குழுவில் துணைத் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் வெளியாகி உள்ளன.
இப்பல்கலைக்கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியரான தாரீக், அலிகர் நகரைச் சேர்ந்தவர். மதக்கலவரங்களுக்கு பெயர் போன இந்நகரம் உ.பி.,யில் அதிக முக்கியத்துவம் பெற்றது.
அலிகர் பல்கலைகழகத்தின் துணைவேந்தரானது முதல், பேராசிரியர் தாரீக், மத்திய அரசின் கைப்பாவையாகி மாறியதாகப் புகார் எழுந்தது. தேசியக் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான அவரது பல்கலைகழக மாணவர்கள் நாட்டிலேயே முதன்முறையாகத் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம், நாட்டின் இதர கல்வி நிலையங்களிலும் தீவிரமாகப் பரவியது. இதனால், இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதில் உருவான கலவரத்த்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. வழக்கமாக, போலீஸாரை வளாகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இதையடுத்து பல்கலைகழக வளாகத்தின் உள்ளேயும் நுழைந்து மாணவர்களை ஒடுக்க, துணைவேந்தர் தாரீக் போலீஸாருக்கு அனுமதி அளித்திருந்தார்.
மாணவர்களின் விடுதிகளுக்கு உள்ளும் போலீஸார் நுழைந்து சோதனையின் பேரில் வன்முறை நிகழ்த்தியதாகப் புகார் கிளம்பியது. மத்திய அரசு 2022 இல் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கைக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது.
தேசிய அளவில் இளநிலைக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வுக்கும் எதிர்ப்பு நிலவியது. ஆனால், துணைவேந்தர் தாரீக், இவ்விரண்டையும் மெல்ல, மெல்ல அமலாக்க வழிவகுத்து விட்டார்.அதேபோல், அலிகர் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சிகளில் பாஜக தலைமையிலான ஆட்சியில் அதன் அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி ஒருமுறை அழைக்கப்பட்டிருந்தார்.
இவரை வளாகத்தினுள் நுழைய விடாமல் மாணவர்கள் நுழைவு வாயிலை நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறுவழியின்றி மத்திய அமைச்சர் ஜோஷி திரும்பச் செல்ல வேண்டியதாயிற்று. இந்த எதிர்ப்பும், கரோனா பரவல் காலத்தில் இணையவழி பாடங்கள் நடந்தபோது, முறியடிக்கும் முயற்சி நடைபெற்றது. துணைவேந்தர் தாரீக்கின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இணையவழிக் கூட்டங்களில் பேசினர்.
உ.பி.யின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தும் அதன் மருத்துவக் கல்லூரியின் ஒரு விழாவுக்கு நேரில் வந்திருந்தார். இப்பல்கலைகழகத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்களையும் துணைவேந்தர் தாரீக் பல கருத்தரங்குகளில் பேச வைத்திருந்தார்.
இவை அனைத்தும் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் உத்தரவின் பேரில் துணைவேந்தர் தாரீக் செய்ததாகப் பேசப்பட்டது. இதனால், அவர் ஒரு பாஜக ஆதரவாளர் எனவும் பேச்சு எழுந்தது. ஆனால், உண்மையிலேயே துணைவேந்தர் தாரீக் தன் பதவிக் காலம் முடியும் முன்பாகவே ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். அவருக்கு உபி எம்எல்சியுடன் தற்போது தேசியத் துணைத் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தொகுதிகளில் வெற்றி கடந்த வருடம் நடைபெற்ற ஆஸம்கர் மற்றும் ராம்பூர் இடைத்தேர்தலில் பாஜக முதன்முறையாக வெற்றி பெற்றிருந்தது. இவை இரண்டும் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் ஆகும்.
பாஜகவின் மாற்றம்: இந்த வெற்றிக்கு பின் உ.பி. பாஜகவின் செயல்பாடுகளில் பெருத்த மாற்றம் தோன்றியது. தேசிய அளவிலும் இதுவரை இல்லாத வகையில் முஸ்லிம் வாக்குகளைக் குறி வைக்கப்பட்டன.
பாஸ்மந்தா முஸ்லிம்: இவர்களில் முக்கிய இடம் வகிக்கும் பாஸ்மந்தா முஸ்லிம்கள் பிரிவைச் சேர்ந்தவர் பேராசிரியர் தாரீக். இதனால், அவரை முன்வைத்து உ.பி. முழுவதிலும் பாஸ்மந்தா முஸ்லிம்கள் கூட்டத்தை பாஜக நடத்தி வருகிறது.
மோடியின் நண்பன்: உ.பி.,யில் முக்கிய முஸ்லிம்களை தேர்வு செய்து அவர்களுக்கு ‘மோடியின் நண்பன்’ எனும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளிலும் பேராசிரியர் தாரீக், பாஜகவுக்கு பலம் தருகிறார்.
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு: உ.பி.,யில்மத்திய அரசு அமலாக்க முயலும் பொது சிவில் சட்டத்துக்கும் பேராசிரியர் தாரீக் பெரும் உதவியாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு பாஜகவுக்கு உள்ளது. ஏனெனில், ஒரு முஸ்லிமான அவர் மூலம் எடுத்துரைத்தால் பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் சமூகத்தினரிடமும் ஆதரவு கிடைக்கும் என பாஜக கருதுகிறது.
கேரள ஆளுநர் ஆரீப் முகம்மது கான்: இதுபோல், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தினர் பாஜகவுக்கு ஆதரவளிப்பது முதன்முறையல்ல. இதற்குமுன் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையின் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்த ஆரீப் முகம்மது கானும் பாஜக ஆட்சியில் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.