பிரதமர் மோடியுடன் நல்லுறவு இருந்தபோதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேறியது வருத்தமளிப்பதாக மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை ஆட்சியைவிட்டு அகற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. 26 கட்சிகள்கொண்ட அந்தக் கூட்டணிக்கு I.N.D.I.A எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணியை ஒருங்கிணைத்ததில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
ஆனால், பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்துக்குப் பிறகு அவரிடம் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அடுத்த மாதம் மும்பையில் நடைபெறவிருக்கும் I.N.D.I.A-வின் அடுத்தக் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். இதுதான் எனது அறிவுரை.
அதில் கலந்துகொள்வதால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை. அந்தக் கூட்டணியில் நிதிஷ் குமார் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நாங்கள் இருவரும் பணியாற்றிய நாள்களிலிருந்து அவருக்கும் எங்களுக்குமான நல்ல உறவை பேணிவருகிறோம். எனவே, அவர் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்ப வேண்டும். நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க-வும் அழைப்பு விடுக்க வேண்டும் என விரும்புகிறேன். சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பீகார் வந்திருக்கிறேன்.
பீகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்குச் சென்றேன். நிதிஷ் குமார் முதல்வராக செய்த நல்ல பணிகளைக் கண்டு வியந்தேன். அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடன் (NDA) சேர்ந்தார். பீகாரின் கோரிக்கைகளை பிரதமர் மோடி அரசு புறக்கணித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். ஒவ்வொரு மாநில மக்களையும், எங்களுடையவர்களாக கருதுகிறோம். மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் விடுவிக்கிறோம்.
எங்களுடன் கைகோத்தவர்கள் யாரும் ஊழல்வாதிகளல்ல. மகாராஷ்டிராவைப்போல பீகாரிலும் ஒரு மாற்றத்தைக் காண விரும்புகிறேன். பிரதமர் மோடியுடன் நல்லுறவு இருந்த போதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேறியது வருத்தமளிக்கிறது. பா.ஜ.க அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. அதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கின்றன. முந்தைய அரசுகள்கூட ஓபிசி மற்றும் பொதுப் பிரிவினரின் கணக்கெடுப்பை தடுத்தன. இதற்கு ஒரு தீர்வு இருக்கும் என்று நம்புகிறேன்.
மணிப்பூருக்கு எதிர்க்கட்சித் தூதுர் குழு சென்றிருக்கிறது. அவர்கள் தங்கள் ஆய்வுகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து, உண்மையான விவாதத்தில் பங்கேற்கட்டும். அதற்கு அரசு தயாராக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஏதோ சாக்குப்போக்கு கூறி விவாதத்தைப் புறக்கணித்து வருகின்றன. மணிப்பூரின் அமைதியின்மையைப் பயன்படுத்தி மியான்மரின் கிளர்ச்சியாளர்கள் நுழைவதை கட்டுபடுத்த அரசு முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்த அறிக்கை கொடுக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கின்றன” என்றார்.