தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் பாத யாத்திரையை தொடங்கினார். 5 கட்டங்களாக நடைபெறும் இந்த பாத யாத்திரை பயணம் 168 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத யாத்திரையின் மூலம் 234 தொகுதிகளிலும் உள்ள மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை.
ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கிய அண்ணாமலையின் இந்த பயணத்தை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த பாத யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனையையும் திமுக ஆட்சியின் குறைகளையும் மக்களிடம் எடுத்துக் கூற உள்ளார் அண்ணாமலை.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவை பெறும் வகையில் அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை பயணத்தை கண்காணிக்க ரகசிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குழு அண்ணாமலையின் பாத யாத்திரையை நாள்தோறும் கண்காணித்து அதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அறிக்கை அனுப்பி வைக்கும் எனவும் கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை பயணம் இன்று 3 வது நாளை எட்டியுள்ளது. அண்ணாமலை செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அண்ணாமலையும் அவர்களின் குறைகளை எல்லாம் கேட்டு வருகிறார். அண்ணாமலை மக்களை சந்திக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.