புதுடெல்லி: மணிப்பூரில் இரு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இரு பிரிவினரிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது பின்னர் வன்முறையாக மாறியது.
கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் தொடர் வன்முறையால், சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஒரு வீடியோ வெளியானது. அதில், ஒரு கும்பல் இரு பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சி உள்ளது. இந்த வீடியோ கடந்த மே 4-ம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிலரைக் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு மத்திய உள்உறை அமைச்சகம் கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி, மணிப்பூர் வீடியோ தொடர்பான வழக்கை சிபிஐ நேற்று முறைப்படி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள சிபிஐ, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.