உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆதில் கான், துபாயில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் உள்துறை வடிவமைப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், எமிரேட்ஸ் டிரா என்ற நிறுவனம், டைச்செரோஸின் ஃபாஸ்ட் 5 (Fast5) என்ற புதிய லாட்டரி திட்டத்தை அறிவித்தது. அதில் வெற்றி பெறுபவருக்கு மாதம் 25,000 தினார் (ரூ.5,59,822) என 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது. இதற்கிடையில் முகமது ஆதில் கான் அந்த லாட்டரியை வாங்கியிருக்கிறார். அதில் அவருக்குப் பரிசு விழுந்திருக்கிறது.
இது குறித்து எமிரேட்ஸ் டிராவைச் சேர்ந்த நிர்வாகி பால் சேடர், “ஃபாஸ்ட் 5-க்கான எங்கள் முதல் வெற்றியாளரை அதன் தொடக்கத்தில் அதாவது எட்டு வாரங்களுக்குள் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மல்ட்டி மில்லியனராவதற்கான விரைவு பாதை என்பதால் இதை ஃபாஸ்ட் 5 என்று குறிப்பிடுகிறோம். இந்த வகையான பரிசு, வெற்றியாளருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலையான தொகை வழங்க உத்தரவாதம் அளிக்கும்” என்றார்.
இந்தப் பரிசு குறித்துப் பேசிய முகமது ஆதில் கான், “இந்தப் பரிசு மிக முக்கியமான கட்டத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது. எனது குடும்பத்தின் ஒரே வருமானம் நான்தான். கொரோனாவில் எனது சகோதரர் இறந்துவிட்டதால், அவரது குடும்பத்திற்கு நான்தான் உதவி செய்துவருகிறேன். எனது மகளுக்கு ஐந்து வயது, மேலும் எனது பெற்றோர் வயதானவர்கள். எனவே, கூடுதல் நிதி சரியான நேரத்தில் வந்து சேரும் என நினைக்கிறன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.