இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பிறகு ஒருநாள் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றும், 2வது போட்டியில் தோல்வியும் தழுவியது. மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்தினார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
பின்னர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 3வது மட்டும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் டிரினிடாட்டில் அமைந்திருக்கும் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றும். 2வது ஒருநாள் போட்டியின்போது பேசிய ஹர்திக் பாண்டியா, இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என ஒப்புக் கொண்டார். இஷான் கிஷன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நம்பிக்கையை காப்பாற்றியிருப்பதாக கூறிய அவர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்குவார்கள் என தெரிவித்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசும்போது, 2வது ஒருநாள் போட்டியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பற்காக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்கவில்லை. மற்றபடி அவர்கள் அனைத்து போட்டிகளிலும் களமிறங்க தயாராகவே இருக்கிறார்கள். சூர்ய குமார் யாதவைப் பொறுத்தவரை நல்ல திறமையான கிரிக்கெட் வீரர். ஆனால் ஒருநாள் போட்டியும் 20 ஓவர் போட்டியும் வெவ்வேறு விதமானவை. அதனால் ஒரு நாள் பார்மேட்டுகளில் விளையாடுவதை அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். எங்களால் முடிந்தளவுக்கு அவருக்கு அதிகமான வாய்ப்புகளை கொடுப்போம். மற்றபடி அதனை சூர்யகுமார் யாதவ் பயன்படுத்திக் கொள்வது அவருடைய கையில் தான் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.