சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம்.
ஆரம்பத்தில் காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த சந்தானம், இப்போது ஹீரோவாக மட்டுமே களமிறங்குகிறார்.
ஹீரோவான பின்னர் ரொம்பவே தடுமாறி வந்த சந்தானத்துக்கு டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கம்பேக் கொடுத்துள்ளது.
இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், செல்வராகவனின் மன்னவன் வந்தானடி குறித்து மனம் திறந்துள்ளார்.
மன்னவன் வந்தானடி – மனம் திறந்த சந்தானம்: விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சந்தானம். சிம்புவால் சினிமாவில் அறிமுகமான சந்தானம், நக்கல் மன்னன் கவுண்டமணி ரூட்டில் காமெடி செய்து மாஸ் காட்டினார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடியில் அதகளம் செய்திருந்தார்.
அதன்பின்னர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்த சந்தானம், இப்போது தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார். ஆனாலும் ஹீரோவாக சந்தானத்துக்கு பெரிய ஹிட் எதுவும் அமையாத நிலையில், இந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது
கடந்த வெள்ளிக் கிழமை வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய சந்தானத்திடம், அவரது மன்னவன் வந்தானடி படம் குறித்து கேட்கப்பட்டது. முதன்முறையாக இயக்குநர் செல்வராகவன் உடன் சந்தானம் கூட்டணி வைத்த திரைப்படம் மன்னவன் வந்தானடி.
எப்போதுமே முன்னணி ஹீரோக்களுடன் இணையும் செல்வராகவன், சந்தானத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டணியில் வழக்கம் போல யுவன் சங்கர் ராஜாவும் இடம்பிடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய மன்னவன் வந்தானடி படப்பிடிப்பு, திடீரென கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து தான் சந்தானத்திடமும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்தானம், “மன்னவன் வந்தானடி ஷூட்டிங் 80 சதவீதம் அளவுக்கு முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். இப்படத்திற்காக காமெடியைக் குறைத்துக் கொண்டு நடித்துள்ளேன். மன்னவன் வந்தானடி இனிமேல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வது தயாரிப்பாளரின் கையில்தான் உள்ளது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.
ஹைதராபாத், அமெரிக்காவில் நடந்து வந்த மன்னவன் வந்தானடி ஷூட்டிங், பைனான்ஸ் பிரச்சினைக் காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.