விஜய் ஆண்டனி படத்துல ஏமாத்திட்டாங்க : வருத்தத்தில் சஹானா
திரைப்படங்களில் வாய்ப்பு தேடி அலைந்த சஹானா சலீம், தாரை தப்பட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தாரை தப்பட்டை மட்டுமே அவருக்கு ஓரளவு பெயரை பெற்றுத்தந்தது. அதன்பின் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் பல முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், வெள்ளித்திரை கதவு மீண்டும் திறக்க விஜய் ஆண்டனியின் படத்தில் நடிக்க சென்றார். ஆனால், அதிலும் தனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் படத்தில் படத்தில் சஹானாவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும், அவரை வைத்து தான் கதையே நகரும் என்றும் கூறி கமிட் செய்துள்ளனர். ஆனால், சூட்டிங்கின் போது சஹானாவின் கேரக்டர் குறைக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீசிய காட்சிக்காக பல மணி நேரம் மேக்கப் போட்டும், சாக்கடையில் இருந்து தூக்குவது போன்ற காட்சிக்கு உடம்பெல்லாம் சிமெண்ட் போன்ற கலவையை ஊற்றியும் சஹானா டெடிகேஷனுடன் நடித்துள்ளார். ஆனாலும், அவர் நடித்த காட்சிகளிலேயே பல காட்சிகளை எடிட்டிங்கின் போது தூக்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்ததற்கு பதிலாக சின்னத்திரையில் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தால் எப்போதோ நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாம் எனவும் வருத்தத்துடன் அந்த பேட்டியில் சஹானா கூறியுள்ளார்.