வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான் பிரான்சிஸ்கோ: ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் பெயர் மாற்றப்பட்டதை அடுத்து, அதன் புதிய, ‘லோகோ’ எனப்படும் சின்னத்தை அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் பொருத்தியதில் விதிமீறல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்க போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
டுவிட்டர் சமூக வலைதளத்தை, தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். இதையடுத்து, டுவிட்டரின் பெயரை, ‘எக்ஸ்’ என அவர் சமீபத்தில் மாற்றினார். நீலநிற பறவை லோகோவை மாற்றி, கருப்பு பின்னணியில் வெள்ளை நிறத்தில் ‘எக்ஸ்’ என்ற ஆங்கில எழுத்து அடங்கிய புதிய லோகோவை எலான் மஸ்க் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில் மேல் மாடியில், எக்ஸ் என்ற பெயர் பலகை சமீபத்தில் பொருத்தப்பட்டது. எக்ஸ் என்ற லோகோவும் நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து டுவிட்டர் பெயர் பலகையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதி பெறாமல் இந்த பணியை மேற்கொள்வதாக கூறி, தடுத்து நிறுத்தினர். இதனால் டுவிட்டர் பெயர் பலகையை அகற்றும் பணி, பாதியில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து சான் பிரான்சிஸ்கோ கட்டுமான ஆய்வுத் துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது: அமெரிக்காவில் கட்டுமானம் தொடர்பான நடைமுறைகளுக்கு முறையான அனுமதி பெற வேண்டும்.
ஒரு கட்டடத்தின் மேல், ஏற்கனவே உள்ள பெயர் பலகையை அகற்றுவது அல்லது புதிய பெயர் பலகையை வைக்க வேண்டுமானால், அதற்கு வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்த பணியின் போது, விபத்து எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய பெயர் பலகை வைப்பது, கட்டடத்தின் உறுதி தன்மையுடன் ஒத்துப் போகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடைமுறை எதையும் பின்பற்றாமல், எக்ஸ் அலுவலகத்தில் புதிய பெயர் பலகை பொருத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement